சானியா மிர்சாவின் புல்வாமா தாக்குதல் குறித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

புல்வாமா தாக்குதல் குறித்து தாம் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என பிரபல டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா கூறியுள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தீவிரவாத தாக்குதலால் வீர மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய-மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் புல்வாமா தாக்குதலுக்கு தனது கருத்தை பதிவு செய்தார். ஆனால், அதில் அவர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதுவும் கூறவில்லை என்று கடும் விமர்சனம் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, தன் மீதான விமர்சனத்திற்கு நீண்ட விளக்கத்தை அவர் அளித்தார். அதில் அவர் கூறுகையில், ‘பிரபலங்கள் என்றாலே கருத்து கூற வேண்டும், தீவிரவாதத் தாக்குதலைப் பொதுவெளியில் குறிப்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கண்டிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்தப் பதிவு.

பதிவுகள் மூலமாகத்தான் தேசப்பற்றையும், நாட்டின் மீதான அக்கறையையும் காண்பிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஏனெனில், நாங்கள் பிரபலங்கள். விரக்தியில் இருக்கும் தனிப்பட்ட நபர்கள் சிலர் தங்களின் கோபத்தையும், வெறுப்பையும் காண்பிக்க இடமில்லாமல் எங்களின் மீது கொட்டுகிறீர்கள். முடிகிற இடங்களில் எல்லாம் வெறுப்பை விதைக்கிறீர்கள்.

தீவிரவாதத் தாக்குதலை நான் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும் என்று எனக்கு அவசியமில்லை. நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று மேலிருந்து கத்த வேண்டிய தேவையும் இல்லை. நான் தீவிரவாதத்திற்கும், அதை பரப்புபவர்களுக்கும் எதிரானவள் தான். நல்ல புத்தியோடு இருக்கும் அனைவரும் தீவிரவாதத்தை எதிர்ப்பர். நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். வியர்வை சிந்துகிறேன். அப்படித்தான் நாட்டுக்காக சேவையாற்ற முடியும்.

சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு நாளாக மாறிவிட்டது. இதுபோன்று இன்னொரு தினம் ஏற்படவே கூடாது. நாங்கள் அமைதியைப் பரப்புகிறோம், ஆனால் நீங்கள் வெறுப்பை விதைக்கிறீர்கள். கோபம் என்பதை நல்ல விடயங்களுக்குக் காட்டினால் நல்லது. மற்றவர்களைக் கிண்டல் செய்து நீங்கள் எதையும் அடையப் போவதில்லை.

வெறுமனே உட்கார்ந்து தாக்குதல் பற்றிப் பிரபலங்கள் எத்தனை பதிவுகள் போட்டிருக்கிறார்கள் என்று எடை போடுவதையும், விமர்சிப்பதையும் விடுத்து, நாட்டிற்கு எதையாவது செய்ய முயலுங்கள். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். எங்களால் முடிந்ததை சமூக வலைதளங்களில் சொல்லாமலே நாங்கள் செய்கிறோம்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், சானியாவின் இந்தக் கருத்துக்கு ட்விட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பதிவுகளில் ‘பிரபலம் என்றால் அப்படித்தான்... எதற்குமே எதிர்வினை ஆற்றாமல் உட்கார்ந்து இருந்தால், கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்’ என்றும், ‘உங்கள் ட்வீட்டில் தப்பித் தவறிக் கூட பாகிஸ்தான் என்ற பெயரைக் கூட உபயோகிக்காதது ஏன்?’ என கூறப்பட்டுள்ளன.

மேலும், தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து சானியா மிர்சாவை உடனடியாக முதல்வர் சந்திரசேகர் நீக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் நாட்டின் மருமகள் தெலங்கானா மாநில விளம்பர தூதராக இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் எம்.எல்.ஏ.ராஜா சிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers