இது மிகவும் கீழ்த்தரமான செயல்! முன்னாள் வீரர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கொந்தளித்த சேவாக்-காம்பீர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

டெல்லி கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவரும், முன்னாள் இந்திய வீரருமான அமித் பண்டாரி தாக்கப்பட்ட சம்பவம் கோழைத்தனமானது என முன்னாள் இந்திய வீரர்கள் சேவாக், காம்பீர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் டெல்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வளாகத்தில், டெல்லி கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் அமித் பண்டாரி 8 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர். மேலும் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

23 வயதுக்கு உட்பட்ட அணி தேர்வில் அனுஜ் தேடா என்பவர் தெரிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர், அமித் பண்டாரியை ஆள் வைத்து தாக்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமித் பண்டாரி கூறுகையில், ‘எனது விளக்கத்தை பொலிசாரிடம் தெரிவித்துவிட்டேன்.

இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் காரணத்தையும் தாக்கியவர்கள் பற்றியும் கூறிவிட்டேன்’ என தெரிவித்தார். இச்சம்பவம் டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீரேந்திர சேவாக் கூறுகையில், ‘வீரரை தேர்வு செய்யாததற்காக, பயிற்சியாளரை தாக்கிய சம்பவம் மிகவும் கீழ்த்தரமானது.

இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க போதுமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

கவுதம் காம்பீர் இது குறித்து கூறுகையில், ‘இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது. தாக்குதலில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஷிகார் தவான் கூறுகையில், ‘அமித் பண்டாரி மீதான தாக்குதல் நம்ப முடியாததாக இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. அதிர்ச்சியானது, கோழைத்தனமானது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers