என் அழுகையை அடக்க முடியவில்லை.. அவரால் பலமுறை அவமதிக்கப்பட்டேன்! இந்திய வீராங்கனை பரபரப்பு புகார்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை மிதாலிராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி படுதோல்வியடைந்து வெளியேறியது.

இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. லீக்கில் இரண்டு அரைசதங்கள் அடித்த மிதாலிராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது.

அணியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார். இந்நிலையில், மிதாலிராஜ் தனது தரப்பு விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

PTI

அதில் அவர் கூறுகையில், ‘இந்த உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அந்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது தான் வேதனையிலும் வேதனை.

எங்களுக்குள் எந்த பிரச்சனைகள் எழுந்தாலும் அதை நானும், ஹர்மன்பிரீத் கவுரும் பேசி தீர்த்துக்கொள்ள முடியும். எல்லா சர்ச்சைகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே பிரச்சனைகளும் உருவெடுத்து விட்டன.

அவரது நடத்தைகள் எனக்கு எதிராகவே அமைந்தன. என் மீது பாகுபாடு காட்ட ஆரம்பித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்கு முந்தைய நாள், பேட்டிங்கில் நடுவரிசையை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீ பின்வரிசையில் இறங்க வேண்டும் என்று பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் கூறினார்.

அணியின் நலன் கருதி நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஜோடி சொதப்பியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுக்களை இழந்து 38 ஓட்டங்களை மட்டுமே எடுத்தோம்.

ஆனாலும் தொடக்க ஜோடியை வெகுவாக பாராட்டியதோடு, அடுத்த ஆட்டத்திலும் அதே ஜோடியே தொடக்க வீராங்கனைகளாக விளையாடுவார்கள் என்று கூறினார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையும் இருந்தது.

அதனால் இது பற்றி தேர்வாளர்களிடம் பேசினேன். அவர்களது தலையீட்டின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகியாக தேர்வானேன்.

ஆனால், ரமேஷ் பவார் என்னை ஊக்கப்படுத்தி ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன் பிறகு அவரது நடவடிக்கை எனக்கு எதிராக முற்றிலும் திரும்பியது. உதாரணமாக, வலை பயிற்சிக்கு அவர் வரும் போது நான் பேச முயற்சித்தால், உடனே அவர் செல்போனை பார்ப்பது போல் அங்கிருந்து சென்று விடுவார்.

நான் அருகில் உட்கார்ந்து இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்தும் வகையில், மற்றவர்களின் பயிற்சியை மட்டும் கவனிப்பது போல் செயல்படுவார். இத்தகைய அவமதிப்புகளால் மனம் காயப்பட்டது. ஆனாலும் நிதானத்தை இழக்கவில்லை.

இதுபோன்ற பிரச்சனைகளால் அணியின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று கருதி அணியின் மேலாளரிடம் எனது வேதனைகளை கொட்டி தீர்த்தேன். ரமேஷ் பவார் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

அவரிடம் ஏதாவது யோசனை கேட்க முயற்சித்தால், உடனே வேறு பக்கம் திரும்பி தொடர்ந்து என்னை வெறுப்பேற்றும்படி நடந்துகொண்டார். அரையிறுதி சுற்றை எட்டிய பிறகு 3 நாட்கள் இடைவெளி இருந்தது.

முதல் நாளில் யாரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. பீல்டிங் பயிற்சி மட்டுமே நடந்தது. ஆனால், ரமேஷ் பவார் 5 வீராங்கனைகளுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு நான், இரண்டு நாட்களாக பேட்டிங் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதனால் நானும் கூடுதல் பயிற்சியில் இணைகிறேன் என்று பவாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினேன்.

அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. வழக்கமாக போட்டிக்கு முந்தைய நாளோ அல்லது போட்டி நாள் அன்றோ ஆடும் லெவன் அணியை அறிவிப்பார். ஆனால், அரையிறுதியில் போட்டி நாள் அன்று காலையிலேயோ அல்லது மாலையிலேயோ அணி குறித்து அவர் வாய் திறக்கவில்லை.

இரவில் அரையிறுதியில் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். நாணயச் சுழற்சிக்கு மைதானத்திற்கு வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மைதானத்திற்குள் நுழைந்தபோது என்னை நோக்கி ஓடி வந்தார். கடைசி லீக்கில் ஆடிய அதே அணியுடன் தான் விளையாடப் போகிறோம் என்று கூறினார்.

அப்போது தான் அணியில் எனக்கு இடம் இல்லை என்பது தெரிந்தது. ஆடும் லெவன் அணியினர் தவிர மற்ற யாரும் வீராங்கனைகளின் பகுதியில் இருக்கக்கூடாது என்று கூறியபோது, மேலும் நொந்து போனேன்.

எனது அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் சிந்தினேன். இவ்வளவு ஆண்டுகள் அளித்த பங்களிப்புக்கு என்ன மதிப்பு? என்று நினைக்கத் தோன்றியது’ என நீண்ட விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...