இலங்கையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய இங்கிலாந்து வீரர்: வியந்து பாராட்டிய ரோகித்சர்மா

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
381Shares

இங்கிலாந்து ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்த அறையை கிரிக்கெட் வீரர்கள் எடுத்துக்கொண்டதற்காக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக, இங்கிலாந்தை சேர்ந்த ரசிகர்கள் 100 பேர் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள இயர்ல்ஸ் ரெஜென்சி ஹோட்டலில் பல மாதங்களுக்கு முன்னரே அறைகளை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் போட்டி ஆரம்பமாக உள்ள சில நாட்களுக்கு முன்னர், இலங்கை, இங்கிலாந்து வீரர்கள் தங்கவதற்காக அந்த ஹோட்டல் அறைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டது. வேறு யாரையும் தங்க அனுமதிக்கவில்லை.

முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் 100 பேரின் பணத்தையும் திரும்ப கொடுத்து கண்டியில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் பலரும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது கடும் கோபமடைந்து சமூகவலைத்தளத்தில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சம்பவம் குறித்து இங்கிலாந்து வீரர்கள் பெரிதும் வருத்தமடைந்துள்ளனர்.

மேலும் ஆட்டத்தின் இடைவேளையின் போது இங்கிலாந்து ரசிகர்கள் 100 பேரையும் நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளனர்.

அதோடு நில்லாமல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், 100 பேரையும் தனித்தனியாக சந்தித்து கையில் மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதனை பாராட்டும் விதமாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித்சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், உங்களின் செயலை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, இலங்கை ரசிகர்களுக்கு ஒரு விலையிலும், இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிகமான விலையிலும் டிக்கெட்டுகளை விற்பனை செய்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்