நான் உயிருடன் இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்! பரபரப்பு தகவலை கூறிய அர்ஜுன ரணதுங்கா

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா, தனக்கு எதிராக போராடியவர்களிடம் இருந்து தப்பித்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் தலைநகர் கொழும்புவில், நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்காவின் பாதுகாவலர்கள், பொதுமக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பெட்ரோலியத் துறை அமைச்சராக உள்ள ரணதுங்கா, சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை எடுக்க அவரது பாதுகாவலர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த பணியாளர்கள் ரணதுங்காவிடம் வாக்குவாதம் செய்தும், பாதுகாவலர்களை ஆவணங்களை எடுக்க விடாமலும் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பணியாளர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் பெரிய கலவரத்தை உருவாக்கியது.

இதில் ஒருவர் பலியான நிலையில், இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அர்ஜுன ரணதுங்கா தன்னை தாக்க முயன்ற பணியாளர்களிடம் இருந்து தப்பித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள் உள்ளே புகுந்து ரணதுங்காவை காப்பாற்றியுள்ளனர்.

அவரை வெளியே கொண்டு வர அதிரடிப்படையின் உடை கொடுக்கப்பட்டது. அதனை அணிந்து கொண்ட ரணதுங்கா, அதிரடிப்படை வீரர் போலவே அவர்களுடன் வெளியேறி தப்பித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அர்ஜுன ரணதுங்கா கூறுகையில், ‘நான் இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் பாதுகாவலர்களின் தைரியமும், கடவுளின் கிருபையும் தான். அவர்கள் என்னை கொல்ல நினைத்தார்கள்.

கிட்டத்தட்ட என்னை அவர்கள் பிடித்துவிட்டார்கள். நம் நாட்டில் சட்டம் அல்லது ஜனநாயகம் எங்கே இருக்கிறது? என் வாழ்க்கை அச்சுறுத்தலின் பிடியில் இருக்கிறது. இலங்கை மக்கள் இதனை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.

News18

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers