சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான்: 6 ஆண்டுகளுக்கு பின் குற்றத்தை ஒப்புக்கொண்டு கண்ணீர் விட்ட பிரபல வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர், 6 ஆண்டுகளுக்கு பின் தற்போது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாகிஸ்தானி அணியை சேர்ந்த பிரபல பந்துவீச்சாளாரான டேனிஷ் கணேரியா, கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனை விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சூதாட்டத்தில் ஈடுபட்ட டேனிஷ் கணேரியா மற்றும் எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட் இருவருக்கும் வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதை வெஸ்ட்பீல்ட் ஒப்புக்கொண்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கணேரியா இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால், அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கணேரியா, தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டியில் பேசியுள்ள கணேரியா, என்னுடைய ரசிகர்கள், பாகிஸ்தான் மக்கள் அனைவரும் எனது சூழலை புரிந்து கொண்டு என்னை மன்னித்து விடுங்கள். நான் சூதாட்ட தரகர் அனு பாட்டுடன் சேர்ந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். நான் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்னை மன்னித்து விடுங்கள்.

என்னுடைய அப்பாவிற்காக தான் நான் இப்படி செய்தேன். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருந்தது. அவர் என்மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவர் தான் எனக்கு முன்மாதிரி என தெரிவித்துள்ளார்.

மேலும், நான் தான் கடந்த 2007-ம் ஆண்டு இந்திய தொழிலதிபர் அனு பட்டிடம், வெஸ்ட்பீல்ட்டை அறிமுகம் செய்து வைத்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்