சிறப்பாக நடைபெற்ற உடல், உள, விளையாட்டு அடைவு மட்டத்தினையும் விருத்தி செய்வதற்கான பயிற்சிப் பட்டறை!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

கிளி சரவணா நிதியத்தின் ஏற்பாட்டில் கனடா யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தினதும், திரு.கந்தவேள் எந்திரி அவர்களதும் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயிற்சி நிலையங்களில் கடந்த மாதம் 21ம் திகதியிலிருந்து செப்ரெம்பர் மாதம் 10ம் திகதிவரை சிறுவர்களுக்கான உடல் வலுவூட்டல் பயிற்சிகள் நடைபெற்றன.

இந்த பயிற்சிகளின் நோக்கமானது விளையாட்டின்பால் ஆர்வமுள்ள சிறுவர்களை இனம்கண்டு அவர்களது உள, உடல், தலைமைத்துவ பண்புகளை விருத்திசெய்வதற்கான ஆரம்ப பயிற்சிகளை வழங்குவதுடன், இவ் ஆரம்ப பயிற்சிகளில் திறமையாக செயற்படும் சிறார்கள் கொண்டிருக்கும் அவர்களது விசேட உடற்தகைமைகளின் அடிப்படையில் பொருத்தமான விளையாட்டுக்களில் அவர்களை ஈடுபடுத்தல்.

கிளி சரவணா நிதியத்தினால் இவ்வாறு விசேடமாக கட்டமைக்கப்பட்ட பயிற்சிகளை கிளி சரவணா நிதியத்தின் இயக்குனரும், விளையாட்டுப் பயிற்றுனருமாகிய ஆனந்தராஜ் அவர்களது நெறிப்படுத்தலில் கனடா நாட்டிலிருந்து வருகைதந்திருக்கும் கனடா மெய்வல்லுநர் சம்மேளத்தினதும் (Athletic Canada), சர்வதேச மெய்வல்லுநர் சங்கத்தினதும் (IAAF) சிறுவர்களுக்கான பயிற்சிகள் வழங்குவதற்கான அங்கீகாரம் பெற்ற பயிற்றுனர் தேவராஜா அவர்களும், இளைப்பாறிய வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் கே.டபிள்யு விமலராஜன் அவர்களும் வழங்குகின்றனர்.

இப்பயிற்சிகளில் பங்குபற்றி மெய்வல்லுநர் விளையாட்டுக்களில் சிறப்பான அடைவு மட்டத்தினை அடையக்கூடியவர்கள் என்று இனம்காணப்பட்ட வீரர்களுக்கான விளையாட்டுப் பாதணிகள் வழங்கும் நிகழ்வு 15.09.2018அன்று பரந்தன் இந்து ம.வி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிளி சரவணா நிதியத்தின் போசகரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்களும், இயக்குனர் சபையின் நிர்வாகிகளான வைத்தியர் மா.குகராஜா, வைத்தியர் மு.சிறிதர், திரு.அ.றெஜி அலோசியஸ், திருமதி வி.சுரேஸ், செல்வி ஆ.பங்கையற்செல்வி, ஆகியோரும் பரந்தன் பிரதேச, பிரதேச சபை உறுப்பினர் திருமதி விக்ரர் சாந்தி அவர்களும் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிளி சரவணா நிதியத்தினது ஸ்தாபகரும் பிரதான அனுசரணையாளருமான பொறியியலாளர் திரு.ஆ.கந்தவேள் அவர்களது தந்தையார் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந் நிதியத்தின் நோக்கங்கள் பற்றி உரையாற்றிய இயக்குனர் அவர்கள், இந்நிதியமானது கடந்த கால யுத்த அனர்தங்களினால் சிதைவுற்றுக் காணப்படும் சமூகத்தில் உள்ள சுகாதாரம், உடல் ஆரோக்கியம், பாடசாலை செல்லும் சிறுவர்களதும், வேலைக்குச் செல்லும் உழைக்கும் வர்க்கத்தினரதும் உணவு முறைகளில் உள்ள குறைபாடுகள், சமூக கட்டமைப்பில் உடல் உள ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் போன்றவைகளை மேம்படுத்துவதுடன்,

சிறுவர்களது உடற்தகைமைகளை விருத்தி செய்தல் மற்றும் விளையாட்டு சம்மந்தமான பயிற்சிகள் வழங்குவதுடன் திறமையான வீரர்களை இனம்கண்டு அவர்கள் தேசிய ரீதியிலான போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களை முக்கியமான நோக்கங்களாக கொண்டு கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய நிறுவனத்தின் போசகரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் தனது உரையில் இந்நிறுவனம் முற்று முழுதாக சமூக நலன் சார்ந்தாக செயற்படினும் குறிப்பாக சிறுவர்களது உடல், உள ஆரோக்கியத்தில் கூடிய கவனம் செலுத்துவதாகவும் சிறுவர்களது தகைமைகளை இனம்கண்டு அவர்களை அந்தந்த துறைகளில் சிறப்பாக மிளிரவைத்து சமூகத்தின் நற்பிரஜைகள் ஆக்குவதில் தாம் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும்.

அந்த வகையில் இந்நிறுவனத்தின் செயற்பாடுகளிற்கு சிறுவர்களாகிய உங்களது பங்களிப்பும் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளும் மிகவும் அவசியமானது என தெரிவித்ததோடு, இவ்வாறான தூரநோக்கு செயற்பாடுகளைக்கொண்ட நிறுவனம் ஒன்றினை உருவாக்கி அனுசரணை வழங்கிவரும் வட்டக்கச்சியினை சொந்த இடமாகவும் தற்போது கனடாவில் வசித்துவருபவருமான பொறியியலாளர் திரு.ஆ.கந்தவேள் அவர்களது செயற்பாடு மாவட்டத்திற்கு முன் உதாரணமான ஒன்று எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட சிறார்களுக்கான விளையாட்டுப் பாதணிகள் வழங்களுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers