வரி ஏய்ப்பு விவகாரம்: 16 மில்லியன் பவுண்டுகள் அபராதத்தை ஏற்ற ரொனால்டோ!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஸ்பெயின் நாட்டில் தன் மீது நிலுவையில் இருந்த வரி ஏய்ப்பு வழக்கை முடிக்கும் வகையில், சுமார் 16.8 மில்லியன் பவுண்டுகள் அபராதத்தை ஏற்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்புகொண்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக முன்னணி கால்பந்து வீரர் ரொனால்டோ விளையாடி வந்தார். கடந்த 2011-2014 ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 12.8 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ரொனால்டோவின் மீது வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு 12.1 மில்லியன் பவுண்டுகள் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், ஸ்பெயின் நாட்டின் சட்டப்படி நிர்வாக ரீதியான குற்றங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு குறைவான தண்டனை இருந்தால், அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் அடிப்படையில் ரொனால்டோ சிறை செல்லவில்லை.

இந்நிலையில், ரொனால்டோவுக்கு அபராதத் தொகையான 12.1 மில்லியன் பவுண்டுகளுடன், வழக்குக்கு செலவான தொகையாக 4.7 மில்லியன் பவுண்டுகள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை ரொனால்டோவும் ஒப்புக்கொண்டதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் ஜுவெண்டஸ் அணிக்கு மாறியுள்ளார். இதற்கு காரணம் ஸ்பெயினில் உள்ள அதிகப்படியான வரிவிதிப்புகள் தான் என்று கூறப்படுகிறது.

ஆனால், ரியல் மாட்ரிடை விட ஜுவெண்டஸ் சிறிய அணியாகும். எனினும், இத்தாலியில் குறைவான வரிவிதிப்புகள் உள்ளதால், ரொனால்டோ ஸ்பெயினில் தான் செய்திருந்த அனைத்து முதலீடுகளையும் திரும்பப் பெறும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AFP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers