ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்ணின் கண்ணீர் கதை!

Report Print Maru Maru in ஏனைய விளையாட்டுக்கள்
591Shares

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணாக பதக்கம் வென்றுள்ளார் சிமோன் மானுவல் (Simone Manuel). வெற்றியில் அவருக்கு சிரிப்பும் உற்சாகமும் வரவில்லை. மாறாக, கண்கலங்கி அழுதார்.

அவருடைய ஆனந்த கண்ணீருக்குப் பின்னால், அமெரிக்காவில் 1960 ம் ஆண்டு வரை, பொது நீச்சல் குளங்களிலும், முக்கியமான கடற்கரைகளிலும் கறுப்பின மக்கள் குளிக்கத்தடை இருந்த நினைவும் இருக்கிறது.

குளிக்க தடை

கறுப்பின மக்கள் மீது நடந்த கொடுமைகள் வரலாறு வைத்திருப்பதும் வைத்தில்லாததும் ஏராளம். ஆனால், ஒரு நீச்சல் வீராங்கனையாக உருவெடுப்பதற்கும் இந்த நிறவெறி பிரச்சினைகள் ஏற்படுத்திய சிக்கல்களுக்கு சில சம்பவங்கள்.

1953 ல் லாஸ் வேகஸில் உள்ள ஒரு ஹோட்டல் நீச்சல் குளத்தில் கறுப்பரும் திரைப்பட நட்சத்திரமுமான டேன்ரிட்ஜின் பாதம் பட்டதற்காக, குளத்தில் இருந்த அவ்வளவு நீரையும் வெளியேற்றி சுத்தம் செய்தனர்.

அதுபோல, மற்றொரு குளத்திலும் தண்ணீர் வெளியேற்றி மாற்றப்பட்டது. அது பாடல் மற்றும் நடன கலைஞருமான சம்மி டேவிஸ் ஜூனியர் தன் காதலியை, குளத்தில் நீச்சல் பழக வைத்த காரணத்திற்காக.

1964 ம் ஆண்டில் புளோரிடா மோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தின் அருகே ஒரு பார்வையாளனாக நின்று கொண்டிருந்த கறுப்பின இளைஞன் ஆர்வத்தில் குதித்துவிட்ட காரணத்தால், அவன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதோடு, அந்த மோட்டலின் மேலாளர் ஆசிட்டை நீரில் கொட்டி வெறுப்பை காட்டி இழிவுப்படுத்தினார்.

அப்போதும், இவர்கள் வீட்டில் கறுப்பர்கள் கடின வேலைக்காரர்களாக இருந்துள்ளனர்.

நீதிமன்றமும் கைவிட்டது

1954 ல் உச்ச நீதிமன்றமும் கறுப்பர்களுக்கு எதிராக பரபட்சமாகவே தீர்ப்பு வழங்கியது. ஒரு கூட்டாட்சி நீதிபதி, நீச்சல்குளங்கள் பள்ளிகளைவிட உணர்வுப்பூர்வமானது என்றார். கறுப்பர்கள் பள்ளிகளிலே ஒதுக்கப்படும் தீண்டத்தகாதவர்கள் என்பதை நினைவுபடுத்தினார். மேலும், பால்டிமோர் நகரில் ஒதுக்கப்பட்ட குளங்களை கறுப்பர்களுக்கு ஏற்படுத்தினர்கள்.

பல தலைமுறைகளாக ஒதுக்கப்பட்டதால் கறுப்பர்கள் நீச்சல் திறனற்று இருந்தார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மறைத்து அது அவர்களுடைய இயலாமையாகவே மனசாட்சி இன்றி புராணம் படித்தனர்.

மறைந்தது மாயை

1987 ஏப்ரலில் ஒரு பேட்டியில், அல் கம்பனிஸ் என்ற, லாஸ் ஏஞ்சல்ஸின் கலைஞர் நிர்வாகி, கறுப்பர்கள் நீச்சல் தெரியாதவர்கள், தொழில்முறை விளையாட்டு மேலாண்மை பதவிகளுக்கு பொருத்தமில்லாதவர்கள் என்றார். அப்போது ஏபிசியின் டெட் கோப்பல் அதை தெளிவுப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு அல் கம்பனிஸின் பதில் கறுப்பர்கள் மிதக்கும் திறனற்றவர்கள் என்பதாகத்தான் இருந்தது. அவருடைய அந்த தவறான கருத்து பொதுவான குரலாகவும் வலுத்தது.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கருத்து கலைந்திருக்கிறது. சிமோன் மானுவலின் இந்த சாதனை, அவர்களுடைய வெற்றுக்குரலை வீழ்த்தி உண்மையின் உரத்த குரலாக நிலைக்கிறது.

ஒலிம்பிக் நீச்சலில் தங்கம் வென்று கறுப்பின பெண்ணாக தன் நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு அல்லாமல், அவர்கள் பொதுக்குளத்தில் நீந்த தடைவிதித்திருந்த காலத்தில், ஒரு நாடு தன் சட்டங்களாலே தன் பெருமையை தாழ்த்திக் கொண்டதையும் உணர்த்தி இருக்கிறார்.

ஒரு இனத்துக்கு எதிராக ஆதிக்க சமூகத்தினர் ஏற்படுத்திய சதி, மூளையில் மாட்டிய விலங்கு, ஒரு பெண்ணின் நீச்சல் வெற்றியில் நீர்த்துப்போனது. உண்மை இல்லாதது, எல்லாரிடமும் எல்லா காலத்திலும் செல்லாதது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments