இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீற்றர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 130 எரிமலைகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீற்றர் உயரம் கொண்ட செமெரு எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 5.6 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகையை உமிழ்ந்து வருகிறது. எரிமலை வெடிப்பு காரணமாக அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.
மேலும் எரிமலையில் இருந்து வரும் சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேசமயம் எரிமலை வெடிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆகவும், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 826 ஆகவும் அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி ஜனவரி 9 ம் திகதி ஸ்ரீவிஜயா விமான சேவை நிறுவன விமானம் ஒன்று 62 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது.
இதில் அனைவரும் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 17 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.