கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதாகத்தான் இதுவரை நம்பப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் ஐஸ் கிரீமில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
சீனாவிலுள்ள Tianjin என்ற இடத்தில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் மூன்றில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கோண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 4,836 ஐஸ்கிரீம் பெட்டிகளில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.
அவற்றில் 2,089 பெட்டிகள் தற்போது வைரஸ் வெளியில் பரவ இயலாத வகையில் சேமிப்பகம் ஒன்றில் சீல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
1,812 ஐஸ் கிரீம் பெட்டிகள் மற்ற மாகாணங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு, 935 பெட்டிகள் உள்ளூர் சந்தைக்குள் நுழைந்துவிட்டன என்றாலும், 65 பெட்டிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐஸ் கிரீம் வாங்கியவர்கள் தாங்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து அறிவிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் பணி புரியும் 1,662 பணியாளர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது, அவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸ் துறை வல்லுனரான Dr Stephen Griffin இது குறித்து கூறும்போது, மனிதர்கள் தொட்டதால்தான் அந்த ஐஸ் கிரீமில் கொரோனா பரவியுள்ளது.
ஆகவே, எல்லா ஐஸ் கிரீமிலும் கொரோனா இருக்கும் என மக்கள் திகிலடையவேண்டிய அவசியமில்லை என்கிறார்.