கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த ஆய்வு: சீனா செல்லும் WHO நிபுணர் குழு

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
117Shares

கொரோனா வைரஸின் உண்மையான பிறப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் நடத்தப்பட்டுவரும் சர்வதேச ஆராய்ச்சி தொடர்பாக WHO நிபுணர்கள் ஜனவரி 14-ஆம் திகதி சீனாவுக்கு செல்கின்றனர்.

கடந்த ஒரு வருடமாக ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுநோய் முதன்முதலில் மத்திய சீன நகரமான வுஹானில் 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தோன்றியது.

ஒரு வருடத்திற்கு முன்னர் 61 வயதான ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அதிகாரப்பூர்வமான முதல் நபராக மாறினார்.

அவர் மற்றும் அவரை தொடர்ந்து பதிவான சில கொரோனா பாதிப்புகள், சீனாவின் வுஹான் நகத்தில் உள்ள Huanan கடல் உணவு சந்தையுடன் தொடர்புகொண்டாக அறியப்பட்டது. அதன்பிறகு பல மாதங்களாக அந்த சந்தை மூடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வுஹான் நகரம் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக உலகம் முழுவதும் முத்திரை குத்தப்பட்டது.

இருப்பினும், பெருந்தொற்று தோன்றிய இடம் சீனா தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எந்தவித நம்பத்தகுந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, சீனாவும் உலக நாடுகளின் கூற்றை ஏற்க மறுத்தது.

இதனையடுத்து, கொரோனா வைரஸின் உண்மையான பிறப்பிடம் மற்றும் அதன் தோற்றத்தை கண்டுபிடிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், COVID-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச நிபுணர்களின் குழு, வரும் ஜனவரி 14-ஆம் திகதி சீனாவுக்கு வரவுள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த குழு ஆரம்பத்தில் ஜனவரி தொடக்கத்தில் சீனா செல்ல திட்டமிட்டது. ஆனால், கடந்த வாரம் சீன அரசு அவர்களின் நுழைவுக்கு அங்கீகாரம் வழங்காததால் அவர்களின் வருகை தாமதமானது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் குழுவின் வருகை தேதியை அறிவித்த சீன தேசிய சுகாதார ஆணையம், அவர்களின் பயணம் குறித்து விரிவாக விளக்கவில்லை.

கடந்த ஆண்டில் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பல நாடுகள் இப்போது அதிகரித்து வரும் வெடிப்புகளின் பிடியில் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.

தொற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், SARS-CoV-2 வைரஸ் தோற்றத்தை அறியவும், அதன்முலம் எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய வைரஸ்கள் தோன்றாமல் தடுக்கவும், இந்த தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என WHO தலைவர் Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.

WHO மற்றும் சீன அரசாங்கத்தின் கூட்டு அதிகார வரம்பிற்கு உட்பட்ட 10 சர்வதேச வல்லுநர்கள் இந்த ஒரு பயணத்தில், மார்க்கெட் கட்டிடத்தில் கடந்த ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், மக்கள் மற்றும் விலங்குகளின் ஆழமான 'தொற்றுநோயியல், வைராலஜிக், செரோலாஜிக் மதிப்பீடுகளை' ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்