விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
398Shares

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு 62 பயணிகளுடன் ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் நேற்று புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் விமானம் நடுவானில் மயமாகிவிட்டதாக செய்தி வெளியானது.

அதன் பின் விமானம், அங்கிருக்கும் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

ஜாவா கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல், மனித உடல் பாகங்களும் கண்டுடெடுக்கப்பட்டன. இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதியானது.

இதையடுத்து, ஜாவா கடலில் விமானம் விபத்துக்குள்ளான இடமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் விமானிகளின் உரையாடலை சேமித்து வைக்கும் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் கருப்பு பெட்டிகள் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கருப்பு பெட்டி மீட்கப்பட்டால் அதில் பதிவான விமானிகளின் உரையாடல்களை ஆய்வு செய்யப்படும், அதன் மூலம் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்