அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈராக் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது! எதற்காக?

Report Print Basu in ஏனைய நாடுகள்
151Shares

ஈராக்கிய உயர்மட்ட துணை இராணுவத் தளபதியைக் கொன்றது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கைது செய்ய பாக்தாத் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

2020 ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி மற்றும் ஈராக்கின் உயர்மட்ட துணை இராணுவத் தளபதி Abu Mahdi al-Mohandes ஆகியோர் கொல்லப்பட்டனர்.

ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது.

2020 ஜூன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்தது.

மேலும், டிரம்புக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பும்படி சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கு ஈரான் கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கை இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஈராக் தலைநகர் கிழக்கு பாக்தாத்தில் உள்ள நீதிமன்றம், தண்டனைச் சட்டத்தின் 406வது பிரிவின் கீழ் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்ட்டை வெளியிட்டது.

இந்த பிரிவின் கீழ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனைக்கு வழிவகுக்கிறது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணை முடிந்துவிட்டதாக நீதிமன்றம் கூறியது, ஆனால் இந்த குற்றத்தில் ஈராக்கியர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் என தொடர்பு இருக்கும் மற்ற குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்