தெருவீதியில் ஊர்வலம்... நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரே நாளில் பெண் உறுப்பு சிதைப்பு: வெளிவரும் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கென்யாவில் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய திருவிழாவை முன்னிட்டு, நாள் தோறும் நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கு பெண் உறுப்பு சிதைப்பு நடத்தப்பட்டுள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் இருந்தே, மிகோரி கவுண்டி பகுதியில் தினசரி 100 சிறுமிகளுக்கு பெண் உறுப்பு சிதைப்பு நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்த நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும், கென்யா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது.

தற்போது மிகோரி கவுண்டி பகுதியில் இருந்து வெளியான காணொளி காட்சி ஒன்று சமூக ஆர்வலர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆண்கள் கும்பல் ஒன்று பெண் உறுப்பு சிதைப்பு நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகளை தெருவீதி வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர்.

இந்த நிகழ்வுக்கு பல சமூக ஆர்வலர்கள் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். செப்டம்பர் கடைசு வாரம் தொடங்கப்பட்ட இந்த விழாவானது இந்த வாரத்தில் முடிவுக்கு வரும் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, குரியா வெஸ்ட் பகுதியில் 80 சிறுமிகள் பாடசாலைக்கு திரும்பவில்லை எனவும், பெண் உறுப்பு சிதைப்பு தொடர்பான அச்சம் காரணமாக சிறுமிகள் குடியிருப்பை விட்டே மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாயமான சிறுமிகள் அனைவரும் 9 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.

பெரும்பாலான சிறுமிகள், பெண் உறுப்பு சிதைப்பு நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், குடும்பத்தில் இருந்தே வெளியேற்றும் சூழல் இருப்பதாலையே இதற்கு உடன்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குடும்பத்தினரின் உதவி இல்லாமல், சிறுமிகளால் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

சில தொண்டு நிறுவனங்கள் தற்போது, பெண் உறுப்பு சிதைப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் சிறுமிகளுக்கு அடைக்கலம் வழங்குவதுடன், பெற்றோர்களிடம் இது தொடர்பில் பேசி, இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, 2020-ல் மட்டும் இதுவரை உலகமெங்கும் 4.1 மில்லியன் சிறுமிகளுக்கு பெண் உறுப்பு சிதைப்பு நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்