நடுக்கடலில் நடந்த பயங்கரம்: தென் கொரியாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்

Report Print Basu in ஏனைய நாடுகள்

தென் கொரியா அதிகாரி கொல்லப்பட்டதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து மிகவும் வருந்துகிறேன் என்று கிம் மன்னிப்பு கோரியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தவொரு பிரச்சினையிலும் தென் கொரியாவிடம் வட கொரிய தலைவர் மன்னிப்பு கேட்பது மிகவும் அசாதாரணமானது.

வட கொரியாவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையிலான கடல் எல்லையாக செயல்படும் இராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே கடந்த வாரம் தென் கொரிய மீன்வள அதிகாரி காணாமல் போனதாகக் கூறப்பட்டது.

காணாமல் போன அதிகாரி வட கொரிய ரோந்து படகில் வைத்து விசாரிக்கப்பட்டதாகவும், பின்னர் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் வட கொரிய படையினர் அவரை சுட்டுக் கொன்றதாக உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி தென் கொரிய இராணுவம் தெரிவித்தது.

47 வயதான அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் வட கொரிய படைகள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் செயல்பட்டிருக்கலாம் என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

பின்னர், அவரது உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து பஸ்பமாக்கியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்தது.

தற்போது வட கொரிய தலைவர் கிம் மன்னிப்பு கோரியுள்ளது தென் கொரியாவில் வட கொரியாவுக்கு எதிராக உள்ள எதிர்ப்பு உணர்வுகளை குறைக்கும் என்றும், இந்த வாரம் தென் கொரியா அதிகாரி மரணம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜே-இன் மீது பெருகிய விமர்சனங்களை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்