உருக்குலைந்த பெய்ரூட்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள்: யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை என சூளுரை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சுமார் 150 பேரை பலிவாங்கிய சக்திவாய்ந்த வெடிவிபத்துக்கு பின்னால், அரசுக்கு எதிராக கொந்தளித்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்திய பெய்ரூட்டில் டசின் கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டதாக வியாழக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதில் சில எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதுடன், அங்கு சிறிய அளவில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் வீசப்பட்டன எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, வெடிவிபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தூசி மற்றும் குப்பைகளை அகற்ற தொண்டர்கள் தொடர்ந்து லெபனான் முழுவதும் இருந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.

வெடிவிபத்துக்குப் பின்னர் முதல் முறையாக சிலர் சிதைந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் திரும்பியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஹில்டா என்ற பெண்மணி, தமது வாழ்வாதாரம் மொத்தமாக பறிபோனதாக கூறி, தமது கடைக்கு அருகே கண்ணீருடன் முறையிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்காக இனி எதையும் நான் செய்ய விரும்பவில்லை. அரசியல்வாதிகளால் எங்களின் வாழ்வாதாரமும், குடியிருப்புகளும் என அனைத்தும் சேதமடைந்துள்ளது.

அரசியலில் ஏதேனும் மாறுதல் வரும் என்றால், நாட்டை கட்டி எழுப்ப எங்களாலான உதவிகளை நாங்களும் மேற்கொள்வோம்.

இல்லை எனில் பொதுமக்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நீங்களே உருக்குலைந்துள்ள இந்த நாட்டை பராமரியுங்கள் என வெறுப்பும் கோபமும் கொந்தளிக்க பேசியுள்ளார்.

லெபனானில் ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை கடும் உயர்வை சந்தித்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் 255 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 137-ல் இருந்து 149 என அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்