பெய்ரூட் வெடி விபத்து: விசாரணைக்குட்படுத்தப்பட்ட ரஷ்ய தொழிலதிபர்... அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்த வெடி பொருட்களுக்கு சொந்தமான கப்பலின் உரிமையாளரான ரஷ்ய தொழிலதிபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெய்ரூட் வெடிவிபத்துக்கு காரணமான 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டும், அதை சுமந்து வந்த கப்பலும் ரஷ்ய தொழிலதிபரான Igor Grechushkin என்பவருக்கு சொந்தமானவை.

Rhosus என்னும் அந்த கப்பல் 2014ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் ரஷ்யாவிலுள்ள Batumi என்ற இடத்திலிருந்து Mozambique என்ற இடத்திற்கு செல்லும் வழியில், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த கப்பலை பரிசோதித்த லெபனான் அதிகாரிகள், இனி கடலில் பயணிக்கும் அளவிற்கு அந்த கப்பல் தகுதியாக இல்லை என்று கூறி அந்த கப்பலின் பயணத்திற்கு தடை விதித்துள்ளார்கள்.

அப்போது, தான் திவாலாகிவிட்டதாக அறிவித்த Igor, இனி அந்த கப்பலுக்கான துறைமுக கட்டணங்களை தன்னால் செலுத்த முடியாது என்று கூறி, கப்பலிலுள்ள எட்டு உக்ரைன் நாட்டவர்கள் மற்றும் இரண்டு ரஷ்யர்கள் உட்பட 10 ஊழியர்களுடன் அந்த கப்பலை கைவிட்டு சென்றுள்ளார்.

அந்த பணப்பிரச்சினை தீரும் வரை, கப்பலின் கேப்டனும் மூன்று ஊழியர்களும், ஓராண்டு காலம் கப்பலிலேயே இருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பின்னர், துறைமுக அதிகாரிகள் அந்த வெடிபொருட்களை கைப்பற்றி துறைமுகத்தில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்கள்.

ஆக, Igor பக்கத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள சைப்ரஸ் அதிகாரிகள், சைப்ரஸில் வாழும் அவரது வீட்டுக்கு சென்று, லெபனான் அதிகாரிகள் சார்பில் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.

விசாரணையின் நோக்கம் லெப்னான் அதிகாரிகளின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமே.

எனவே, Igor மீது குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ள சைப்ரஸ் அதிகாரிகள், இனியும் அவர்மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்