லெபனான் பெய்ரூட் வெடிப்பு: சம்பவ இடம் அருகே இருந்த தமிழரின் அனுபவம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் இதுவரை குறைந்தது 135 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

துறைமுகம் அருகே இருந்த கிடங்கில் இருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்தார்.

சம்பவ இடம் அருகே இருந்த அஜீஸுக்கும் இந்த வெடிப்பில் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர் வெடிப்பு நடந்த துறைமுகத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அஜீஸ், "சம்பவம் நடந்த இடத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் நான் வசிக்கிறேன். என் வீட்டு பால்கனியில் அமர்ந்து பார்த்தால் அந்த வெடிப்பு சம்பவம் நடந்த இடம் நன்கு தெரியும்," என்கிறார்.

மேலும் அவர், "வழக்கமாக நான் மாலை நேரத்தில் வெளியே கடைகளுக்கு செல்வேன். அன்று என் நல்ல நேரமா என்ன என்று தெரியவில்லை, வெளியே செல்லவில்லை. வெளியே சென்று இருந்தால் கண்டிப்பாக உயிருடன் இருந்திருக்க மாட்டேன்," என்று கூறுகிறார்.

வெடிப்பு நடந்த சமயத்தில் குளித்து கொண்டு இருந்திருக்கிறார் இவர். குளியலறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியதில் இவர் கண்ணில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

வெடிப்பின் பாதிப்பு 15 கி.மீட்டர் தூரம் அளவுக்கு இருந்ததாக கூறும் அஜீஸ், தான் பணியாற்றும் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டதாக கூறுகிறார்.

"நிலநடுக்கம், சுனாமி"

"நாங்கள் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டது, சுனாமி வந்துவிட்டது என்றுதான் நினைத்தோம். ஏற்கெனவே இங்கு சுனாமி ஏற்பட்டிருக்கிறது. வெடிப்பின் அதிர்வில் வீட்டின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, சுவர்கள் சரிந்தன. வெடி சத்தத்தில் கொஞ்ச நேரத்திற்கு காதே கேட்கவில்லை," என்று கூறுகிறார்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறும் அவர், வெளியில் தெரிவதைவிட நிலைமை மிக மோசம் என்று கூறுகிறார்.

"துறைமுகத்தை சுற்றி ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், அவற்றில் இடம் இல்லை. காயமடைந்த நண்பர்களை வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில்தான் சேர்த்து உள்ளோம்," என்கிறார்.

"எங்கும் மரண ஓலம்"

எல்லா திசைகளிலும் மரண ஓலம் கேட்பதாக கூறும் அவர், "கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக லெபனானில் வசிக்கிறேன். குறிப்பாக அண்டை நாடான சிரியாவில் நடந்த குண்டு வெடிப்புகள், உள்நாட்டு கலவரம், மற்றொரு அண்டை நாடான இஸ்ரேல் பிரச்சனை என எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறேன், படித்திருக்கிறேன்.

ஆனால், இந்த வெடி சம்பவமும், அதன் தாக்கமும் என் வாழ்நாளில் காணாத ஒன்று. நேற்று துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதியில் ஒரு பத்து கிலோமீட்டர் பயணித்தேன். எல்லா வீதிகளிலும் மரணங்கள். நில அதிர்வில் வீடுகள் இடிந்துள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்ணாடிகள், சுவர்கள் சரிந்து வெறும் கூடுகளாக மட்டுமே உள்ளன," என்கிறார் அஜீஸ்.

'கொரோனாவால் சேதம் குறைந்தது`

துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் சுற்றுலா பகுதிகள். பெரும்பாலும் அரபு நாடுகளில் இருந்து வருவார்கள். ஆனால், இப்போது கொரோனா தொற்று காரணமாக கூட்டம் குறைவு. இதனால் அதிகளவிலான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிறார் அஜிஸ்.

ஏற்கெனவே பொருளாதார சிக்கல், கொரோனா பிரச்சனையில் நாடு உழல்வதாகவும், இந்த வெடிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

அஜீஸ், "துறைமுகம்தான் லெபனானின் அச்சாணி. அதற்கு ஏற்படும் சிறு கீரலும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில், பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும்," என்று கூறுகிறார்.

நிலைமை என்ன?

தங்களது உணவு தேவைகளுக்கு பெரும்பாலும் லெபனான் இறக்குமதியை நம்பியே இருக்கிறது. உணவுப் பொருட்கள் துறைமுக பகுதியில் உள்ள கிடங்குகளில்தான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இப்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் அவையும் அழிந்திருக்கலாம் என்றும், இது லெபனானில் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தலாம் என்றும் அச்சம் நிலவுகிறது.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்