பெய்ரூட் வெடி விபத்து... துறைமுக ஊழியர்களுக்கு கடும் தண்டனை, வெடி பொருள் யாருக்கு சொந்தமானது? சில முக்கிய தகவல்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக, துறைமுக ஊழியர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்து தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், 2014ஆம் ஆண்டு முதல், யாரெல்லாம் அந்த துறைமுகத்தில் பணியாற்றினார்களோ, அத்தனை பேரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு பக்கம், யார் இந்த தவறுக்கு பொறுப்போ, அவர்கள் அதற்கான விலையை செலுத்தியாக வேண்டும் என நாட்டின் அரசியல் தலைவர்கள் சூளுரைக்க, சுங்க அலுவலர்களோ, அரசியல் தலைவர்கள் மீதே குற்றம் சாட்டுகிறார்கள்.

குவித்து வைக்கப்பட்டிருக்கும் வெடி பொருட்கள் தொடர்பான அபாயம் குறித்து தாங்கள் பல முறை எச்சரித்தும், தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில், எந்த வித பாதுகாப்பும் இன்றி, வெறும் சாக்கு மூட்டைகளில், வெடி விபத்துக்கு காரணமான ரசாயனம் சேமிப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியூட்டுகின்றன.

இந்த ரசாயனம் ரஷ்ய தொழிலதிபரான Igor Grechushkin என்பவருக்கு சொந்தமானதாம்.

2013ஆம் ஆண்டு, முன்னாள் சோவியத் ரஷ்யாவிலுள்ள Batumi என்ற இடத்திலிருந்து Mozambique என்ற இடத்திற்கு கப்பல் ஒன்றில் கொண்டு செல்லப்படும்போது, அந்த கப்பலை வழிமறித்த லெபனான் அதிகாரிகள், அந்த வெடிபொருட்களை கைப்பற்றி துறைமுகத்தில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்கள்.

அங்குதான், செவ்வாயன்று ஒரு சிறு தீ விபத்து ஏற்பட, அந்த 2,750 டன் எடையுள்ள ரசாயனம் வெடித்துச் சிதறி, சிறு அணு குண்டு ஒன்று வெடித்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்திவிட்டது.

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது என்றும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,000 என கண்டறியப்பட்டுள்ளதாகவும் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்