இதுவரை கொரோனா வைரஸ் அண்டாத கிராமம்: எங்கே இருக்கிறது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா அச்சத்தால் வல்லரசு நாடுகளே முடங்கிக் கிடக்கும் வேளையில், ஐரோப்பிய மலை கிராமம் ஒன்றில் தொற்று பயமின்றி மக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போஸ்னியா நாட்டின் ஜெலஸ்னிகா மலையில் ஆயிரத்து 500 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது லுகோமிர் மலைக் கிராமம்.

அந்நாட்டின் மிக உயரமான கிராமமாக திகழும் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கால்நடை வளர்ப்பே பிரதானமான தொழிலாக உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போஸ்னியா நாட்டில் பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலேயே அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், லூகோமிர் மலைக் கிராமத்தில் முதியவர்கள் கூட முகக் கவசம், கையுறை அணியாமல் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

நகரங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ளதால் போர் மற்றும் எந்த நெருக்கடியிலும் சிக்காமல் தங்களது பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

உறைபனி காலத்தில் மட்டும் இந்த மலை கிராம மக்கள் அருகே உள்ள சராஜிவோ பகுதிக்கு குடும்பத்துடன் சென்று தங்கியிருப்பது வழக்கம்.

அதன்படி, மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் முன் சராஜிவோவில் இருந்து மலை கிராமத்திற்கு திரும்பிய மக்கள் கொரோனா பயமின்றி பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

இருசக்கர வாகன சாகச வீரர்கள் மற்றும் மலையேறும் வீரர்களின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் இந்த மலைக் கிராமத்தில் தற்போது கொரோனா அச்சத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அரிதாகவே உள்ளது. இருப்பினும், கிராம மக்கள் அமைதியாக காலத்தை கழித்து வருகின்றனர்.

போஸ்னியாவில் தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததால், இம்மாத தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து சராஜிவோ பகுதிக்கு செர்பியா, ஆஸ்திரியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விரைவில் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்