கொரோனா பாதிப்பு என பொய் கூறிய விமான பயணி: உடனடியாக நடவடிக்கை எடுத்த நிர்வாகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நெதர்லாந்து இளைஞர் ஒருவர் விமானத்தை தாமதப்படுத்த கொரோனா பாதிப்பு என புரளியை கிளப்பியதால் அவருக்கு டப்ளின் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

நெதர்லாந்து இளைஞர் Job van den Broek என்பவர் கடந்த 11 ஆம் திகதி அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் அவர் டப்ளினில் வைத்து விமானத்தில் இருந்தபடி மொபைலில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

விமான பணிப்பெண்கள் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் மொபைலில் பேசுவதை நிறுத்தவில்லை. மட்டுமின்றி தமது தாயாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அதனாலையே அவரிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது விமான பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, விமானம் புறப்பட தாமதமும் ஆனது.

குறித்த தகவலை விமான ஊழியர்கள் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கவே, டப்ளினில் வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதில் அவர் அவசர அழைப்பு என்பதால் விமானத்தை தாமதப்படுத்தவே தாயாருக்கு கொரோனா பாதிப்பு என பொய் கூறியதாகவும்,

உண்மையில் அமெரிக்காவில் இருக்கும் தமது காதலியுடனே பேசியதாகவும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய் சொன்னால் கூட மன்னிக்க முடியும், ஆனால் தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு என புரளியை கிளப்பினால் அதை மன்னிக்க முடியாது என கூறி அவருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இருப்பினும் உடனடியாக அவருக்கு பிணை வழங்கப்பட்டதால், அவர் சிறை தண்டனை அனுபவிக்காமல் விடுவிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்