கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகித்தது எப்படி?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பல நாடுகள் சிங்கப்பூருக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கும் அளவுக்கு கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ சிங்கப்பூர் ஒரு காரணமாக அமைந்துவிட்டது துரதிர்ஷ்டம் தான்.

சரி, சிங்கப்பூருக்கும் கொரோனா வைரஸுக்கும் என்ன தொடர்பு? சிங்கப்பூர் சென்று வந்த பலர் தத்தம் சொந்த நாடுகளில் கொரோனா தொற்றை பரப்பியது எப்படி?

பிரித்தானியாவிலிருந்து தென் கொரியா வரை கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்றால், பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூரைத்தான் கைகாட்டுகிறார்கள்.

சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியதில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகித்தது எப்படி?

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

BBC

பல வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டறியப்பட்டாலும், சிங்கப்பூரில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று சீனாவுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் வர்த்தக உறவுகள். கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் சுமார் மூன்றரை மில்லியன் சீன மக்கள் சிங்கப்பூருக்கு வந்திருப்பதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை நாம் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக உலக நாடுகளை விமானப் பயணத்தின் மூலம் இணைக்க கூடிய முக்கிய மையமாக செயல்படும் Changi விமான நிலையத்தை கூறலாம்.

இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு 80 விநாடிகளுக்கும், ஒரு விமானம் புறப்படுகிறது ஒரு விமானம் தரையிறங்குகிறது.

BBC

அந்த அளவுக்கு மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய, வெளிநாட்டு மக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி அது.

இது மட்டுமல்லாமல் தொழில் ரீதியான சந்திப்புகளுக்கும், கூட்டங்களுக்கும் சிங்கப்பூரை பலரும் தேர்ந்தெடுப்பதால், உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அடிக்கடி சிங்கப்பூருக்கு வருவதும் வழக்கமான ஒன்று.

ஆனால் அப்படி நடைபெற்ற கூட்டம் ஒன்றுதான், சீனா தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா பரவ காரணமாக இருந்துள்ளது என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாத மத்தியில், சீனா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது.

சீனாவை சேர்ந்த சிலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 41 வயதான மலேசிய நபர் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.

GETTY IMAGES

இந்த கூட்டம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து அந்த மலேசிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அடுத்து அந்த நபர் மூலம் அவருடைய தாய் மற்றும் சகோதரிக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதே கூட்டத்தில் கலந்து கொண்ட தென்கொரியாவைச் சேர்ந்த இருவருக்கும் சில நாட்களுக்கு பிறகு கொரோனா இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது.

மேலும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று சிங்கப்பூர் வாசிகளுக்கும், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது அடுத்தடுத்து கண்டறியப்பட்டது.

ஆனால், இந்த தொற்று, அவர்கள் தத்தம் நாடுகளுக்கு சென்ற பின்னர்தான் உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸின் அறிகுறிகள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு பின்னரே தெரியவரும் என்பதால், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீனர்களுக்கு தாங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவில்லை.

GETTY IMAGES

இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் வெகு எளிதாக பரவியுள்ளது.

அதிலும் குறிப்பாக பிரிட்டனைச் சேர்ந்த Steve Walsh என்பவர், சிங்கப்பூர் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிரான்ஸில் உள்ள சுற்றுலா விடுதியில் விடுமுறையை கழிப்பதற்காக தங்கியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவரிடமிருந்து 11 பேரை கொரோனா தாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

அதில் ஐந்து பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், ஐவர் பிரான்ஸை சேர்ந்தவர்கள், ஒருவர் ஸ்பெயினை சேர்ந்தவர். ஆனால் சிங்கப்பூரின் கவலை அந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட 100 பேரைக் குறித்து மட்டும் அல்ல.

ஏனென்றால் கொரோனா தொற்று தொடங்கிய டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை சிங்கப்பூரில் நடைபெற்ற, சீன நபர்கள் கலந்து கொண்ட வர்த்தக கூட்டங்களில் உடன் யாரெல்லாம் பங்குபெற்றுள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைப்பது ஒரு கடினமான பணியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் தற்போது இதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலாவது, சீனாவுடனான தனது எல்லை அடுத்த 14 நாட்களுக்கு மூடப்படும் என சிங்கப்பூர் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இதனால் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற மற்றும் சிங்கப்பூரில் பணி செய்ய உரிமம் பெற்ற சீன நாட்டினர் யாரும் சிறிது நாட்களுக்கு சிங்கப்பூருக்குள் வர முடியாது.

அடுத்து, கொரோனா தொற்று தொடர்பாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள யாராவது விதியை மீறினாலோ அல்லது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றாலோ அவர்களது பணிக்கான உரிமம் ரத்து செய்யப்படும்.

அவர்கள் சிங்கப்பூரில் பணி செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட அந்த பணியாளரின் உரிமையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு ஆட்கள் எடுக்க முடியாது.

மேலும், மில்லியன்கணக்கான சிங்கப்பூர் மக்களுக்கு அரசே முகமூடிகளை விநியோகித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் அரசே வாட்ஸ் ஆப்பில் அப்டேட் அளிக்கிறது.

இப்படி பல நடவடிக்கைகளின் மூலம், எப்படியாவது தனக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை, கொஞ்சமாவது குறைத்துக்கொள்ள சிங்கப்பூர் அரும்பாடுபட்டு பட்டு வருகிறது என்றே கூறலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers