கொரோனா பீதி... சீனாவுக்கு வெளியே மொத்தமாக முடக்கப்பட்ட நகரம்: தீவிர கண்காணிப்பில் 10,000 பேர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வியட்நாமில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்துள்ள நிலையில், அங்குள்ள அரசாங்கம் ஒரு நகரத்தையே மொத்தமாக முடக்கி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிகுந்த சீனாவுக்கு வெளியே மொத்த நகரமும் முடக்கப்படுவது இதுவே முதல் முறை.

வியட்நாமின் Son Loi நகரமே கொரோனா பீதி காரணமாக நகர நிர்வாகத்தால் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 10,000 மக்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவ முகமூடிகள் அணிந்த காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் 10,000 பேரும் அடுத்த 20 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Son Loi நகரத்தில் ஏற்கெனவே 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆறாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்த நிலையிலேயே கடுமையான இந்த முடிவுக்கு வியட்நாம் நிர்வாகம் வந்துள்ளது.

பெப்ரவரி 13 ஆம் திகதி முதல் அடுத்த 20 நாட்களுக்கு கண்காணிப்பு நடவடிக்கை தொடரும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னதாக வியட்நாமில் இருந்து சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், சீனா பயணிகளுக்கான விசா அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1,350 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60,000 பேர் பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் மாகாணம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 56 மில்லியன் மக்கள் குடியிருக்கும் ஹூபே மாகாணத்தில் இருந்து சுமார் 5 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு வெளியான சில நாட்களில் அங்கிருந்து மாயமான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்