சீனாவை மிரட்டும் கொரோனா அரக்கன்: எதிர்த்து போராடும் நர்ஸ் தேவதைகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் இதுவரை 815 பேரை பலிகொண்ட கொரோனா வியாதியுடன் போராடும் நர்ஸ்கள் தொடர்பில் நெஞ்சைப் பிசையும் தகவல்கள் பல வெளியாகிவருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுக்க இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை 815 என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமே கொரோனா வைரசைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவோ அந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது.

சீன அரசுக்கு பக்கபலமாக அங்குள்ள மருத்துவர்களும் நர்ஸ்களும் ஓய்வின்றி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் ஒரு நர்ஸ் தாய்க்கு அவரது சிறு வயது மகள் உணவு கொடுத்தது,

இந்த வைரஸின் மரண எண்ணிக்கை தெரிந்த பின்னரும், கணவர் தன் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்து பிரிந்து சென்றது ஆகிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பலரது கவனத்தை ஈர்த்தது.

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் நோய் என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள் ஆகியோர் முகமூடி மற்றும் கவச உடைகள் அணிந்தே பணியாற்ற வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் சிகிச்சையளிக்க, கிட்டத்தட்ட காற்று புகாத அளவுக்கு இறுக்கமான கவச உடை, முகத்தில் முகமூடி, கண்ணாடி என அனைத்தும் அணிந்து கொண்டு தான் நோயாளிகளுக்கு நர்ஸ்கள் சிகிச்சையளிக்கின்றனர்.

தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்யும் இந்த நர்ஸ்கள் சொற்ப நிமிடங்களே ஓய்வு எடுக்கின்றனர். தொடர் பணிக்கு பின்னர் நர்ஸ்களும், மருத்துவர்களும் தங்கள் முகத்தில் அணிந்திருந்த முகமூடியை கழற்றிய பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி அவர்களது தியாகங்களை எண்ணி பலரையும் உருக வைத்தது.

சோர்வை வெளிப்படுத்தும் வியர்வை, களைப்படைந்த கண்கள், வாடி வதங்கிய முகம், வறண்ட உதடுகள் என பணியாற்றும் நர்ஸ்கள், 12 மணி நேரம் பணி முடிந்து அணிந்திருந்த முகமூடியை கழற்றும்போது நெற்றி, கன்னம் என எங்கு பார்த்தாலும் கோரமான வடுக்கள், காயங்கள் பார்ப்பவர்களின் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

மறுநாளும் தொடர்ந்து முகத்தில் இறுக்கமாக முகமூடி அணிவதால் காயங்கள் ஆறுவதே இல்லை. அந்த காயங்களை பொறுத்துக் கொள்ளலாம் என ஒரு துண்டு பிளாஸ்திரியை ஒட்டிக் கொண்டு மீண்டும் தங்கள் கவச உடையை தறித்து, கொரோனா வைரசுடன் யுத்தம் நடத்தி வரும் இந்த நர்ஸ்களை உலகமெங்கிலும் உள்ள மக்கள் மனிதத்தை காக்க வந்த தேவதைகள் என பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்