அமெரிக்க தூதரகம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்: இறுகும் பதற்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈராக் தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிறன்று இரவு சுமார் 5 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள கிரீன் ஸோன் பகுதியிலேயே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்களில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

ஆனால் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள் என தூதரக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை அப்புறப்படுத்த கோரியும், அமெரிக்க ராணுவம் ஈராக் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் கடந்த 25 ஆம் திகதி பிரம்மாண்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய் அன்றும், அமெரிக்க தூதரகம் அருகே இதுபோன்றதொரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போதும், எச்சரிக்கை மணி முழக்கப்படவும், தூதரக அதிகாரிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

ஈரானிய முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை ஜனவரி 3 ஆம் திகதி அமெரிக்க ராணுவம் படுகொலை செய்த பின்னர்,

ஈராக் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழலே இருந்து வருகிறது. 8-ஆம் திகதி ஈராக்கின் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதலும் முன்னெடுத்தது.

தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பின்னர், ஈரான் மறைமுக தாக்குதல் முன்னெடுக்கும் என அப்போதே அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஒருங்கிணைந்த ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வெற்றி கண்ட கத்யுஷா ஏவுகணைகளையே அமெரிக்க தூதரகம் மீது பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்