சீனாவில் சிக்கியுள்ள தமிழர்கள்! தினம் தினம் செத்துப் பிழைப்பதாக கவலை தெரிவிப்பு

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சீனாவில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் ஒவ்வொரு நாளும் செத்து, பிழைப்பதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.

சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. பலரின் உயிர்களை பறித்துள்ள அந்த வைரஸ் அங்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் ஓட்டல்கள், ஐ.டி.கம்பெனிகளில் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் போதுமான உணவு, தண்ணீர் இன்றி அங்கு தவித்து வரும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து உகான் நகரில் ஓட்டலில் பணியாற்றி வரும் தேவகோட்டையை சேர்ந்த மூர்த்தி என்பவர் கண்ணீர்மல்க கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான உகான் நகரில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஓட்டல்கள், ஐ.டி.கம்பெனி, கல்வி நிலையங்கள் என பல்வேறு பணிகளை செய்து வரும் நாங்கள் 70 பேர் கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாமல் அறைகளிலேயே முடங்கி கிடக்கிறோம்.

மீதம் உள்ளவர்கள் நிலைமை என்னவாயிற்று? என்று தெரியவில்லை. ஓட்டல்கள் மூடப்பட்டதால் உணவு கிடைப்பது இல்லை. இதனால் பசியோடும், பட்டினியோடும் நாட்களை கழிக்கிறோம். சொந்த ஊர்களுக்கும் திரும்பமுடியவில்லை என்பது கூடுதல் தலைவலியை ஏற்படுத்துகிறது.

“உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து, நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள். சொந்த ஊர்களுக்கு வெளியே தனியாக அறை எடுத்து கொடுங்கள். நாங்கள் அங்கே நோய் தொடர்பான பீதி தணியும் வரையிலும் தங்கி இருக்கிறோம் என்று எங்களுடையை நிலைமையை இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் அவர்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவித்து வருகிறோம். செத்து, பிழைத்து வருகிறோம். எனவே பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களை பத்திரமாக மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்