ஜனாதிபதியின் பெயர் ஆபாசமாக மொழிபெயர்ப்பு: மன்னிப்பு கோரிய பேஸ்புக்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் பெயர் பர்மிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆபாசமான பொருள் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரண்டாவது நாளன்று இந்த மொழிப்பெயர்ப்பு தொடர்பிலான சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக சனிக்கிழமை ஷி ஜின்பிங், மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூச்சி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை முன்னெடுத்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பாக பர்மிய அரசின் பேஸ்புக் பக்கத்தில், சீன ஜனாதிபதியின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூச்சியின் தனிப்பட்ட மற்றும் அலுவலக பேஸ்புக் கணக்குகளின் மூலம் பர்மிய மொழியில் இடப்பட்ட பதிவுகளில் சீன ஜனாதிபதியின் பெயர் "Mr Shithole" என்று ஆங்கிலத்தில் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், இந்த தவறான மொழிபெயர்ப்புக்கு, "தொழிநுட்ப பிரச்சனையே" காரணம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்நுட்ப பிரச்சனை ஒன்றை சரிசெய்துவிட்டதாகவும் இதுபோன்ற சம்பவம் இனியும் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாகவும் பேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்