புறப்பட்டு 3 நிமிடங்கள்.... ஏவுகணைக்கு இலக்கானது எப்படி: 176 பேரை பலிகொண்ட விமான விபத்தின் திகில் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பில் துல்லியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தெஹ்ரானில் கடந்த 8 ஆம் திகதி ஈரானிய ராணுவத்தினரால் உக்ரேனிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் உடல் கருகி பலியானார்கள். சிலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்ற தகவலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

இந்த நிலையில், உக்ரேனிய விமானம் ஈரானிய ஏவுகணைக்கு இலக்கானது தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது.

ஈரானிய முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி தரும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஜனவரி 8 ஆம் திகதி ஈரான் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் முன்னெடுத்தது.

இந்த தாக்குதலுக்கு பின்னர் சுமார் 4 மணி நேரம் கடந்த நிலையில், உள்ளூர் நேரப்படி காலை 6.12 மணிக்கு தெஹ்ரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 176 பேருடன் உக்ரேனிய விமானம் புறப்பட்டு சென்றது.

விமானமானது வழக்கமான பாதையிலேயெ சென்றுள்ளது. மட்டுமின்றி புறப்பட்ட 3 நிமிடங்களில் சுமார் 2.4 கி.மீ உயரத்தையும் எட்டியுள்ளது.

இங்கிருந்து இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தமது கடைசி சமிக்ஞையை அனுப்பிய 13-வது நொடி குறித்த விமானத்தை ஏவுகணை தாக்கியுள்ளது.

ஆனால் எங்கிருந்து அந்த ஏவுகணை குறித்த விமானத்தை தாக்கியது என்ற கேள்வி தற்போதும் மர்மமாகவே உள்ளது.

தெஹ்ரான் விமான நிலையத்தின் அருகே, சில கிலோமீற்றர்கள் தொலைவில் ஈரானிய ராணுவத்தின் முக்கிய தளங்கள் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள ஒரு தளத்தில் இருந்தே சுமார் 6.15 மணியளவில் ஏவுகணை புறப்பட்டதாக சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று உறுதிபட தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கெமாராவில் அந்த காட்சிகளும் பதிவாகியுள்ளது.

ஏவுகணை புறப்பட்ட சில நொடிகளில் விமானம் தாக்குதலுக்கு இலக்கானதும், தீ கோளமாக மாறியதும் கெமராக்களில் பதிவாகியுள்ளன.

மட்டுமின்றி ஏவுகணை தாக்குதலுக்கு இரையான விமானமானது, புறப்பட்ட இடத்திற்கே சில நிமிடங்கள் பயணமானதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானம் வான்பரப்பில் இருந்து தீச்சுடராக தரையில் விழும் காட்சிகளை உள்ளூர் மக்கள் 6.19 மணிக்கு வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

கடைசியாக கட்டுப்பாட்டறைக்கு சமிக்ஞையை அனுப்பிய பின்னர் 16 கிலோமீற்றர் தொலைவில் வைத்து விமானம் தாக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் எரிந்த பாகங்கள் அனைத்தும் 400 மீற்றர் பரப்பளவில் சிதறிக்கிடந்துள்ளன. விபத்துக்குள்ளான பதியில் இருங்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இருந்து விமானத்தின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.

விமானம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈரான் தற்போது உறுதியான ஒரு முடிவை அறிவித்து, இதுவரை முன்னோடியில்லாத செயலை செய்துள்ளது.

ஆனால் அதுவே தற்போது, ஈரானில் அரசியல் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்