குவாசிமை படுகொலை செய்த ஆளில்லா விமானம் எவ்வளவு அபாயகரமானது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அந்த விமானம் தொடர்பில் பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாதில் வைத்து ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் படுகொலை செய்தது.

குறித்த தாக்குதலுக்கு ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது.

அமெரிக்க விமானப்படையில் இருக்கும் அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் என்ற ட்ரோன்களையே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகிலேயே அதிதிறன் மிக்க ட்ரோன்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது.

பல நாடுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை பெருக்கி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா தனது எதிரிகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கு ட்ரோன்களை பரவலாக பயன்படுத்தி வருகிறது.

1,701 கிலோ எடை கொண்ட ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை தாங்கி செல்லக்கூடிய இந்த எம்.கியூ - 9 ரீப்பர் ட்ரோனால் அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில், 1,850 கிலோ மீற்றர் தூரத்துக்கு, மணிக்கு 482 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.

அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில் பறக்க கூடிய இந்த வகை ட்ரோன்கள், தனது இலக்கை கண்டறிந்தவுடன், குறைந்த பட்சமாக 800 அடி உயரம் வரை கீழிறங்கி தாக்குதல்களை மேற்கொள்ளவல்லது.

இவ்வளவு குறைந்த உயரத்தில் சென்றாலும், கிட்டதட்ட எவ்வித சத்தத்தையும் இந்த ட்ரோன்கள் ஏற்படுத்தாததால் ஒருவர் மேல்நோக்கி பார்க்கும் வரை இவற்றை அடையாளம் காண முடியாது.

எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் இலக்குகளை தேடி கண்டுபிடித்து தாக்கி அழிப்பதுடன், உளவுப்பணிகளில் ஈடுபட்டு, எல்லையில் கண்காணிப்பில் ஈடுபடுவது, பல்வேறு ஆயுதங்களை கண்டறிவது,

பேரிடர்களின் போது உதவிப்பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மோசமான வானிலையின்போதும் துல்லியமாக செயல்படும் திறன் பெற்றது என்று அமெரிக்க விமானப்படை கூறுகிறது.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 93 எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் அமெரிக்க விமானப்படையின் வசம் உள்ளது.

நான்கு ட்ரோன்கள் இருக்கும் ஒரு தொகுப்பு எம்.கியூ - 9 ரீப்பரின் விலை 64.2 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்