நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் சிக்கி கருகிய சுற்றுலா பயணிகள்.. அடையாளம் காண திணறும் நிபுணர்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தின் ஒயிட் ஐலேண்ட் எரிமலை கடந்த 9ம் திகதி திங்கட்கிழமை வெடித்தில் சிக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது, எரிமலை வெடிப்பில் சிக்கி அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை16 ஆக உயர்ந்துள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத பாதிக்கப்பட்டவர், அவுஸ்திரேலியாவில் சிகிச்சைக்காக திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சுமார் 20 பேர் கடுமையான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையில், மீட்பு குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை எரிமலை தீவுக்கு திரும்பின, ஆனால் மீதமுள்ள இரண்டு உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

சம்பவயிடத்தில் 8 பொலிஸ் மற்றும் மீட்புப் பணியாளர்கள் 75 நிமிடங்கள் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், சடலங்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று துணை பொலிஸ் கமிஷனர் மைக் கிளெமென்ட் கூறினார்.

சடலங்களை மீட்டெடுப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், பொலிஸ் மற்றும் இராணுவ டைவர்ஸ் வெள்ளை தீவைச் சுற்றியுள்ள நீரைத் தேடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காண சவாலானதாக இருப்பதால், ஆக்லாந்தில் நோயியல் நிபுணர், தடயவியல் பல் மருத்துவர் மற்றும் கைரேகை அதிகாரி உள்ளிட்ட நிபுணர்களால் அடையாளம் காணும் மேற்கொள்ளப்படுகிறது.

24 வயதான நியூசிலாந்து சுற்றுலா வழிகாட்டி திபீன் ஜேம்ஸ் தே ரங்கி அட்டாஹுவா மாங்கி உட்பட மேலும் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மற்ற மூவரும் அவுஸ்திரேலியர்கள், 15 வயதான ஸோ எலா ஹோஸ்கிங் மற்றும் அவரது 53 வயதான மாற்றாந் தந்தை கவின் பிரையன் டல்லோ, 51 வயதான அந்தோணி ஜேம்ஸ் லாங்ஃபோர்ட்.

சனிக்கிழமையன்று, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 21 வயதான கிரிஸ்டல் ஈவ் ப்ரோவிட் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டார்.

தோற்றம், உடை, புகைப்படங்கள், கைரேகைகள், மருத்துவ மற்றும் பல் பதிவுகள் மற்றும் டி.என்.ஏ மாதிரிகள் போன்ற பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர். இந்த விவரங்கள் பின்னர் பிரேத பரிசோதனையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் பொருத்திப் பார்க்கப்படும்.

வெடிப்பு நடந்தபோது தீவில் இருந்த 47 பேரில் 24 பேர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், 9 பேர் அமெரிக்கர்கள், 5 பேர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள், 5 பேர் ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள், 4 பேர் சீனா, 2 பிரித்தானியர்கள் மற்றும் 2 பேர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.

திங்களன்று, நியூசிலாந்தில் 14:11 உள்ளுர் நேரத்திற்கு ஒரு நிமிடம் மௌன கடைபிடிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்