வெளிநாட்டில் வேலை பார்த்த மகன்... பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு! 50 நாட்களாக காத்திருக்கும் பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் உடலை 50 நாட்கள் ஆகியும் சொந்த நாட்டிற்கு கொண்டுவரமுடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன சூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். பொட்டு தம்பதியரின் மகன், ராஜ்குமார். 29 வயதான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

ராஜ்குமார்/விகடன்

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் திகதி, ராஜ்குமாரின் பெற்றோருக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று கூறியுள்ளனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிக்க சென்ற மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதையடுத்து ராஜ்குமாரின் உறவினர் அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இறந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை.

இதனால் மகனின் உடலை கூட பார்க்க முடியாமல் பெற்றோர் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.

இது குறித்து ராஜ்குமாரின் தாய் பொட்டுவிடம் பிரபல தமிழ் ஊடகம் விகடன் கேட்ட போது, வெளிநாட்டில் இருக்கும் போது அவன் நாள் ஒன்றிற்கு மூன்று முறையாவது போன் செய்து பேசுவான், தீபாவளிக்கு நான் வருகிறேன் அம்மா என்று சொன்னான்.

ராஜ்குமார் பெற்றோர்/விகடன்

ஆனால் அவன் இப்படி பிணமாக வருவான் என்று நினைத்து கூட பார்த்தில்லை, அவன் இறந்து 50 நாட்கள் மேல் ஆகியும், உடலை பார்க்க முடியாமல் தவித்து வருகிறோம் என்று கண்கலங்கினார்.

அப்போது ராஜ்குமாரின் தந்தை கூறுகையில், 2 ஆண்டுக்கான விசா முடிந்தும் 9 மாதமாக சவுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தான்.

நாட்டை விட்டு வெளியேற முடியாமலும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமலும் மிகுந்த வேதனையில் இருந்த அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.

இறந்து இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது, மொத்த குடும்பமும் ஒருவேளை உணவுகூட நிம்மதியாக உண்ண முடியாமல் காத்திருக்கிறோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்