துயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் நாட்டில் திருமண விழாவில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகேஸ் நகரில் நேற்று திருமண விழா ஒன்று நடந்தது.

இதற்காக மணமக்களின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அங்கு வந்திருந்த உறவினர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

மேலும் படுகாயம் அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பலத்த தீக்காயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மகிழ்ச்சியுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் திருமண பந்தலானது ரத்தமும் சதையுமாக காணப்பட்டது அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.

இந்த விபத்தில் மணமக்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

குர்திஸ்தான் மாகாணம் இந்த விவகாரம் தொடர்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2005 ஆம் ஆண்டு மசூதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 59 பேர் கொல்லப்பட்டதுடன் 250-கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்