சுரங்க ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..! 37 பேர் பலி.. 60 பேர் காயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

புர்கினா பாசோவில் சுரங்க ஊழியர்கள் சென்ற கார் மீது, மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கனேடிய சுரங்க நிறுவனமான செமாஃபோ, இரண்டு சுரங்கங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று சுரங்க ஊழியர்கள் சிலர், இராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் 5 வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் வாகனம் சென்றுகொண்டிருந்த போது, ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதில் 37 பேர் கொல்லப்பட்டதோடு, 60 பேர் காயமடைந்திருப்பதாக, பிராந்திய ஆளுநர் சைடோ சனோ தகவல் வெளியிட்டுள்ளார்.

"எங்கள் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சப்ளையர்களின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் அபாயமின்மையை உறுதி செய்வதற்காக நாங்கள் அனைத்து மட்ட அதிகாரிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்" என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது சுரங்க அமைப்பின் உரிமையாளர் செமாஃபோ கூறியுள்ளார்.

நாட்டின் வடக்கு மாகாணங்கள், அண்டை நாடான மாலியில் இருந்து வந்த ஜிகாதி வன்முறையாளர்களை எதிர்த்து கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஜிகாதி வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் தற்போதுவரை அப்பகுதியில் 630 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருப்பதாக AFP செய்திநிறுவனம் கூறுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்