பெற்ற தாயை பட்டினிபோட்டு கொன்ற இந்திய தம்பதி... நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

துபாயில் மனைவியுடன் சேர்ந்துகொண்டு பெற்ற தாயை கொடுமைப்படுத்தி கொன்ற மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நாடுகடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 29 வயதான ஒரு ஆண் தன்னுடைய 28 வயதான மனைவி மற்றும் மகளுடன் துபாயில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு மகளை கவனித்துக்கொள்வதற்காக இந்தியாவிலிருந்த அவருடைய அம்மாவை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவருடைய மகளை 50 வயதான தாய் சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. உடைகளை மாற்றாமல் இருந்ததால் அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த தம்பதி, வயதான பெண் என்றும் கூட பாராமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஒருநாள் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர், உடலில் தீக்காயங்களுடன் தரையில் படுத்து கிடந்த வயதான பெண்ணை பார்த்து, என்ன நடந்தது என விசாரித்துள்ளார். ஆனால் அவர் எந்த பதிலும் கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

உடனே அவர் கட்டிட காவலாளிக்கு தெரியப்படுத்திவிட்டு, ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, எந்த பதற்றமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்த அந்த ஆண், சுடு தண்ணீரை உடலில் ஊற்றிக்கொண்டதால் தீ காயங்கள் ஏற்பட்டிருப்பதாக பொய் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய தாயை ஆம்புலன்சில் ஏற்ற உதவி செய்யாமல் வீட்டிலேயே நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்த மற்றவர்கள் வேகமாக ஓடிவந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவியுள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் ஒரு மாதம் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தம்பதியினர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஜூலை 2018 முதல் அக்டோபர் 2018 இல் இறக்கும் வரை பட்டினி போட்டு சித்ரவதை செய்திருப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனையில் அவருடைய உடலில் பல காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவமனைக்கு கொண்டு வரும்பொழுது அவர் வெறும் 29கிலோ மட்டும் எடையில் இருந்ததாக மருத்துவர் குழு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதன்பிறகு தம்பதியினர் இருவரும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் கூறி உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்