கண்ணில் படும் அனைவரின் தலையும் துண்டிக்கப்படும்... துருக்கி வீரர்கள் எச்சரிக்கை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

குர்து போராளிகள் பின்வாங்கவிட்டால் அவர்களை தலைகள் துண்டிக்கப்படும் என துருக்கி வீரர்கள் எச்சரிக்கை விடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து துருக்கி நடத்தி வந்த தொடர் தாக்குதலால் நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் வடக்கு சிரியாவில் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடன் நீண்ட நேர பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதில், வடக்கு சிரியாவில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் என்றும் அதற்குள் குர்திஷ் தலைமையிலான துருப்புகளை திரும்ப பெற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

அதற்கு இருநாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை குர்திஷ் தலைமையிலான படைகள் தங்களது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக துருக்கிய அமைச்சகம் செய்தி வெளியிட்டது. அதில் ஒரு வீரர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொரு வீரர் காயமடைந்திருப்பதாகவும் கூறியது.

இந்த நிலையில் சிரிய ஜனநாயகப் படைகளின் தலைமை செய்தித் தொடர்பாளர் சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ காட்சியினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துருக்கிய வீரர்கள் சிலர், குர்து போராளிகள் யாரேனும் தங்களுடைய கண்களில் தென்பட்டால் அவர்களுடைய தலைகளை துண்டித்துவிடுவோம் என மிரட்டுவதாக உள்ளது.

ஒப்பந்தம் போடப்பட்ட மூன்று நாட்களிலே இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டிருப்பதால், மீண்டும் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்