குழந்தை தொழிற்சாலை... ஒரே குடியிருப்பில் 19 கர்ப்பிணி பெண்கள்: வெளிவரும் கொடூர பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோசின் குடியிருப்பு ஒன்றில் இருந்து 19 கர்ப்பிணி இளம்பெண்களை அங்குள்ள பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான தகவல்கள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லாகோஸ் நகரத்தின் குறிப்பிட்ட குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்ட 19 கர்ப்பிணிகளும் 15 மற்றும் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, அந்த குடியிருப்பில் இருந்து நான்கு பிஞ்சு பிள்ளைகளையும் லாகோஸ் பொலிசார் மீட்டுள்ளனர்.

குழந்தை தொழிற்சாலை என தரகர்களால் அழைக்கப்பட்ட இந்த குடியிருப்பில் செப்டம்பர் 19 ஆம் திகதியே பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இங்கு கடத்தி வரப்படும் இளம்பெண்கள் பல ஆண்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அந்த குடியிருப்பில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இங்கிருந்து தப்பியவர்கள் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை வாங்கித் தருவதாகவோ, கடத்தியோ வரப்படும் பெண்களே லாகோஸ் குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்ட பெண்களில் அதிகமானோர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருவுறுவதற்காக 7 ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக இங்கிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, உரிய நேரத்தில் சிகிச்சை கிட்டாமலும், மருத்துவமனையில் சேர்ப்பிக்காமல் தவறான சிகிச்சையாலும் பல பெண்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரசவத்திற்கு பின்னர் பெருந்தொகை தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும், கருவுறுவதற்காக பல ஆண்களுடன் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும், மறுத்து அடம்பிடிப்பவர்கள் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சில பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இங்கிருந்து விற்கப்படும் ஆண் பிள்ளைகளுக்கு உள்ளூர் பண மதிப்பில் 500,000 நைரா ($1,630) எனவும் பெண் பிள்ளைகளுக்கு 300,000 நைரா ($980) எனவும் விலைப் பட்டியல் வைத்துள்ளனர்.

மேலும், இளம்பெண்களையும் இந்த கும்பல் விலைக்கு விற்று வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாகோஸ் மட்டுமின்றி நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் இதுபோன்ற கும்பல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும், இதுபோன்று சட்டவிரோத குழந்தைகள் தொழிற்சாலைகளில் இருந்து 160 பிஞ்சு பிள்ளைகளை மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...