10 பெண்கள் கொடூர கொலை... 30 ஆண்டுகளாக விலகாத மர்மம்: இறுதியில் வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென் கொரியாவை உலுக்கிய Hwasong தொடர் கொலை மற்றும் பாலியல் தாக்குதல் குற்றவாளியை நீண்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய தலைநகர் சியோலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Hwasong நகரில் 1980 காலகட்டத்தில் 10 பெண்கள் ஒரே மாதிரியாக கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர்.

கிராம பிரதேசமான Hwasong-ல் வயல் வெளிகளிலும், தெருவோரங்களிலும் இருந்து பெண்களின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

14 முதல் 71 வயதுக்கு உட்பட்ட இந்த பெண்களை கொலை செய்வதற்கு முன்னர் கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் இரையாகியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் நடந்து நீண்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி தொடர்பில் தங்கள் சந்தேகத்தை வெளியிட்டு, அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தொடர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தற்போது 50 வயதை கடந்தவர் எனவும், வேறொரு கொலை மற்றும் பலாத்கார வழக்கில் அவர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும் பொலிசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Hwasong தொடர் கொலை வழக்கு தொடர்பில் சுமார் 3,000 சந்தேக நபர்களை பொலிசார் விசாரித்துள்ளனர்.

இந்த 33 ஆண்டுகளில் குறித்த வழக்கை விசாரித்த பல அதிகாரிகள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டாலும், முக்கிய வழக்காக கருதி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

தற்போது Hwasong குற்றவாளி தொடர்பில் உறுதியான தகவல் கிடைத்திருந்தாலும், அவர் யார் என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை.

கொல்லப்பட்ட 10 பெண்களின் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளும், முக்கிய குற்றவாளியின் டி.என்.ஏ மாதிரியும் ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் தென் கொரிய சட்டத்திட்டங்களின் படி தண்டனை விதிக்க வேண்டிய காலகட்டம் 2006 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துள்ளதால், குறித்த நபருக்கு தண்டனை கிடைப்பது அரிதே என கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கை கதைக்களமாக கொண்டு 2003 ஆம் ஆண்டு வெளியான Memories of Murder திரைப்படமானது பல விருதுகளை அள்ளியதுடன் கொரியா திரைப்படங்களில் முக்கியமானது எனவும் கருதப்படுகிறது.

குறித்த திரைப்படத்தில் டி.என்.ஏ மாதிரியை ஒப்பிட்டே குற்றவாளியை நெருங்குவதாக கதை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்