23 பேரை பலி கொண்ட தேவாலய தாக்குதலை நடத்தியது யார்? அம்பலமான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதலை முன்னெடுத்தது, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் என்று மரபணு பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வழிபாடு நடந்து கொண்டிருந்தது.

அப்போது பலத்த சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் அதிர்ந்துபோய் நாலாபக்கமும் சிதறினர்.

இருப்பினும் குறித்த குண்டுவெடிப்பில் சிக்கி 23 பேர் உடல் சிதறி பலியானார்கள். மட்டுமின்றி 102 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தது, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் என்று மரபணு பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதை இந்தோனேசிய பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய தம்பதியர், ரூல்லி ரியான் ஜேக்கே, அவரது மனைவி உல்பா ஹண்டயானி சலே என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், Jamaah Ansharut Daulah என்ற உள்நாட்டு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கி இருந்ததும், 2017 ஆம் ஆண்டு அவர்கள் துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இவர்கள் சட்டத்துக்கு விரோதமான வகையில்தான் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்