அவர்களை சடலமாகப் பார்க்கும் தைரியம் இல்லை: குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய மணமகன் கண்ணீர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவின் போது முன்னெடுக்கப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் மணமகனின் உருக்கமான பேச்சு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் கடந்த 17 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட திருமணவிழா ஒன்று நடந்தது.

இருவீட்டு உறவினர்களும் அந்த அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்தனர். ஏராளமான பணியாட்கள் அந்த மண்டபத்தில் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர்.

அரங்கத்தில் இருந்த மக்கள் கூட்டத்தின் பெரும்பகுதி இசைக் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்தது.

அப்போது எவரும் எதிர்பாராதவிதமாக அந்த அசம்பாவித சம்பவம் நடந்தது. இசைக் கச்சேரி நடந்துகொண்டிருந்த இடத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது.

மண்டபத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அங்கிருந்த உடல்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்தக் குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் என 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஊடகத்திடம் பேசிய மணமகன், நான் என் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களை இழந்துவிட்டேன்.

இந்தச் சம்பவம் என் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவர்களால் பேசக்கூட முடியவில்லை. எனது வாழ்வில் இனி மீண்டும் மகிழ்ச்சியைப் பார்க்க மாட்டேன்.

நான் எவ்வளவு மறக்க நினைத்தாலும் இந்த சம்பவத்தை மறக்க முடியாது.

நான் மனதளவில் உடைந்துவிட்டேன். என்னால் என் உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க முடியாது. அவர்களின் முகத்தைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை எனக் கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்