51 பேரின் சாவுக்கு காரணமான கொடூரன்... சிறையிலிருந்து நண்பனுக்கு ரகசிய கடிதம்: என்ன எழுதியிருந்தான் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி 51 பேரை கொலை செய்த கொடூரன், தன் நண்பருக்கு ரகசியமாக கடிதம் எழுது அனுப்பியுள்ள தகவல் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மசூதியில் பிரென்டன் டாரன்ட் என்ற நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 51 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து பிரென்டன் டாரன்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பிரென்டன் டாரன்ட், அலன் எனப்படும் தனது ரஷ்ய நண்பருக்கு எழுதிய கடிதத்தை, 4-சான் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக வெள்ளை இனவாதிகள் தங்கள் கருத்துகளை வெளியிடப் பயன்படுத்தும் அந்த இணையதளத்தில், டாரன்ட் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பென்சிலால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், அலனுடன் ரஷ்யாவை 1 மாத காலம் சுற்றிப் பார்த்தது குறித்து மட்டுமே பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. நிறவெறியைப் பரப்பும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இருப்பினும் மிகப் பெரிய மோதல் வெடிக்கப் போவதாக அந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ள டாரன்ட், ஆயுதப் போராட்டத்துக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும் வகையில் வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் டாரன்டின் கடிதம் வெளியாகியிருப்பதற்கு சிறைத் துறை அமைச்சர் கெல்வின் டேவிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

28 வயது ஆஸ்திரேலியரான பிரென்டன் டாரன்ட், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் திகதி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், 51 பேர் பலியாகினர்; 40 பேர் காயமடைந்தனர்.

கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய அந்தத் தாக்குதல் தொடர்பாக பிரென்டன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பயங்கரவாத வழக்கு நடைபெற்று வருகிறது.

ஒரு முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரென்டன் டாரன்ட் வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்பதை காட்டும் வகையில், தன் கையில் விரல்களை காட்டியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்