ஸ்தம்பித்த விமான நிலையம்: சீனாவின் அடக்குமுறையை கண்டித்து போராட்டக்காரர்கள் முற்றுகை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஹாங்காங்கில் பொலிசாரின் அடக்குமுறையை கண்டித்து பொதுமக்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டதால், அது மூடப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றவழக்குகளில் சிக்குபவர்களை சீனா கொண்டு சென்று விசாரிக்கும் வகையில் ஹாங்காங்கில் சமீபத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள், கடந்த 3 மாதமாக வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.

ஜனநாயக சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த இரண்டு நாட்களாக போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

போராட்டக்காரர்களும், பொலிசார் மீது கற்களை வீசுவது, தீயணைக்கும் கருவிகள் மூலம் ஸ்பிரே செய்வது, பெட்ரோல் குண்டுகள் வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

இந்த மோதல்களில் இதுவரை 45 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். ஒரு பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரப்பர் குண்டு மூலம் சுடப்பட்டதில் அவர் பார்வை இழந்ததாகவும் வதந்தி பரவியது. அவர் ரத்தம் வழிந்தோடிய நிலையில் தரையில் கிடக்கும் படம், உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது.

பொலிசாரின் அடக்குமுறையை கண்டித்து நேற்று ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி ஹாங்காங் விமான நிலையத்தில் தடையை மீறி உள்ளே நுழைந்தனர். சுமார் 5 ஆயிரம் பேர், விமான நிலையம் முழுவதும் அமர்ந்து கொண்டனர்.

பொருட்களை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகளிலும் அவர்கள் அமர்ந்தனர். இதனால் விமான நிலைய செயல்பாடுகள் ஸ்தம்பித்தன.

இதையடுத்து ஹாங்காங்க விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன

இதனிடையே ஹாங்காங் எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்