கெஞ்சிக் கதறும் ஒரு தாய், செய்வதறியாது திகைக்கும் பாதுகாப்பு படை வீரர்: அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
251Shares

மெக்சிகோ எல்லையில் நிற்கும் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரரிடம் தன் மகனுடன் நிற்கும் ஒரு தாய் கெஞ்சிக் கதறும் சில புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அந்தப் பெண் குவாதிமாலா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்.

அமெரிக்காவுக்குள் நுழைய விரும்பும் பலரைப் போலவே, எப்படியாவது மெக்சிகோ எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தவர் Ledy Perez என்னும் அந்தப் பெண்.

தனது ஆறு வயது மகன் Anthonyயைக் கையில் பிடித்துக் கொண்டு வந்த அவரை மெக்சிகோ எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தடுத்து நிறுத்த, அவரிடம் தன்னையும் தன் மகனையும் எப்படியாவது அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் கெஞ்சும் புகைப்படங்கள்தான் அவை.

தனது சொந்த நாட்டை விட்டு 1,500 மைல்கள் பயணித்து எல்லையை அடைந்த அந்த பெண், பாதுகாப்புப்படை வீரர்களின் முன் மண்டியிட்டும், அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டும் கண்ணீர் விட்டுக் கதறி, தான் தனது மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க விரும்புவதாகவும், தன்னை எப்படியாவது மறுபக்கம் செல்ல அனுமதிக்குமாறும் கெஞ்சியதை, இந்த புகைப்படங்களை எடுத்த பிரபல பத்திரிகை ஒன்றின் புகைப்படக்காரரான Gonzalez கண்ணால் கண்டிருக்கிறார்.

அந்த பாதுகாப்புப் படை வீரரோ, தான் தனக்கிடப்பட்ட உத்தரவுகளை மட்டுமே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்த வீரர்கள் நாட்டுக்குள் நடக்கும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட படையைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் இப்போது எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

மெக்சிகோவிலிருந்து தங்கள் நாட்டுக்குள் மக்கள் நுழைவதை தடுக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் வற்புறுத்தியுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தன்னை எல்லை தாண்ட அனுமதிக்கும்படி அந்த பெண் சுமார் ஒன்பது நிமிடங்களாக கெஞ்சும்போது, அந்த வீரர் முரட்டுத்தனம் எதுவும் காட்டவில்லை என்றாலும், புலம்பெயர்வோர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ள அந்த படம், கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

இதற்கிடையில், நீண்ட நேரம் கெஞ்சியும் அந்த வீரர் தங்களை எல்லையைத் தாண்ட அனுமதிக்க மறுக்கவே, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த பெண், அந்த வீரர் சற்று அந்த பக்கம் திரும்பும் நேரத்தில், மகனை இழுத்துக் கொண்டு அமெரிக்க எல்லையை நோக்கி ஓடியிருக்கிறார்.

அங்கு தயாராக காத்திருந்த அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஏஜண்டுகள் அவர்களை கைது செய்து கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம், அல்லது மெக்சிகோவுக்கு திரும்ப அனுப்பப்படுவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் விசாரணைக்காக காத்திருக்கலாம் என்று தெரிகிறது.

பலர் புலம்பெயர்வோரைக் குறித்து, அவர்கள் ஏன் தங்கள் நாட்டிலேயே இருக்ககூடாது, ஏன் அவர்கள் இங்கு வந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள், அவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என நெகிழ்ச்சி பொங்க கூறும் புகைப்படக்காரரான Gonzalez, ஒவ்வொரு புலம்பெயர்பவருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது என்கிறார் கண்ணின் ஓரத்தில் துளிர்த்திருக்கும் கண்ணீரைத் துடைத்தவாறே...

ஏனென்றால், தன் பிள்ளைக்கோர் நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என போராடிய ஒரு தாயின் உணர்ச்சிப் போராட்டத்தை அவ்வளவு நேரம் கண் முன் கண்டிருக்கிறார் அவர்!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்