ஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலில் சிக்கியவர்கள் யார் யார்? வெளியானது தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் சிறை பிடித்துள்ள இங்கிலாந்து எண்ணெய் கப்பலில் பயணம் செய்த மாலுமிகளில் 18 பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சுவீடன் நாட்டின் ஸ்டீனா பல்க் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டீனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பல்,

இங்கிலாந்து கொடி ஏந்தி சென்று கொண்டிருந்தபோது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் சிறை பிடித்துள்ளது.

தங்கள் நாட்டின் மீன்பிடி படகுடன் மோதியதால்தான் இந்த கப்பலை சட்டப்படி பிடித்து வைத்துள்ளதாக ஹோர்மோஸ்கான் துறைமுக தலைமை இயக்குனர் அல்லா மொராத் அபிபிபூர் கூறி உள்ளார்.

இருப்பினும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிற நிலையில், இந்த கப்பலை ஈரான் சிறை பிடித்திருப்பது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

இந்த கப்பலில் 23 மாலுமிகள் பயணம் செய்தனர். அவர்களில் தலைமை மாலுமி உள்ளிட்ட 18 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

எஞ்சியவர்கள் ரஷ்யா, லாத்வியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இதற்கிடையே ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள கப்பலில் சென்றுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக சிறிபிடிக்கப்பட்ட கப்பல் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹானல், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் சுவீடன் அரசுகளை தொடர்பு கொண்டு வருகிறோம்.

நாங்கள் மாலுமிகளின் குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். மாலுமிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அவர்கள் பாதுகாப்பிலும், நலனிலும் கவனம் செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...