330 கிலோ உடல் எடை கொண்ட நபர் சிகிச்சையின் போது மரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் நாட்டில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர் மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு ரகளையால் கவனிப்பார் யாருமின்றி மரணமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் நட்டின் லாகூர் நகர் அருகே சாதிக்காபாத் பகுதியை சேர்ந்தவர் நூருல் ஹசன். சிறு வயதில் இருந்தே உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு தற்போது 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடை என அதிகரித்தது.

அவருக்கு எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தார் விரும்பிய நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா அவருக்கு உதவ முன்வந்தார்.

இதனையடுத்து குடியிருப்பின் சுவற்றை உடைத்து நூருல் ஹசனை வெளியே கொண்டுவந்த சிறப்பு குழுவினர்,

அவரை லாகூர் நகரில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் பயன்படுத்தினர்.

லாகூரில் உள்ள ஷலாமார் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் நூருல் ஹசனுக்கு ‘லிப்போசக்‌ஷன்’ எனப்படும் எடை குறைப்புக்கான சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அதே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒரு பெண் நோயாளி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இறந்தவர்களின் உறவினர்கள் பலர் அந்த அறைக்குள் கும்பலாக வந்து கூச்சலிட்டு, அழுது ரகளை செய்தனர். இதனால், அங்கு சற்றுநேரம் கலவரமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே அதே அறையில் கண்காணிப்பில் இருந்த நூருல் ஹசனின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்தது. மூச்சுத்திணறலால் அவர் திக்குமுக்காடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட ரகளை காரணமாக அவரை கவனிக்க அங்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ அருகில் இல்லை என கூறப்படுகிறது.

இதனால், நூருல் ஹசன் மற்றும் அங்கே சிகிச்சை பெற்றுவந்த இன்னொரு பெண் என இருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு கொண்டிருந்த நூருல் ஹசனுக்கு முதலுதவி செய்து

அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முயன்றதாகவும், அதற்குள் நிலைமை கைமீறி போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அங்கு நடந்த களேபரத்தின்போது என்ன நடந்தது? என்பதை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கண்காணிப்பு கெமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers