மூத்த தலைவர் மீது தடை விதித்த அமெரிக்கா.. ராஜாங்க உறவு முறியும்! ஈரான் எச்சரிக்கை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஈரானின் மூத்த தலைவர் காமெனி மீது அமெரிக்க விதித்த பொருளாதார தடை, இருநாடுகளுக்கு இடையேயான ராஜாங்க உறவை முறிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்தே இந்த மோதல் போக்கு ஆரம்பித்தது.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்றைய தினம் ஈரானின் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமெனி மீது பொருளாதார தடை விதித்தார்.

இதற்கான ஆணையில் அவர் கையெழுத்திட்டதால், அயத்துல்லா அலி காமெனி அமெரிக்க நிதி ஆதாரங்களை பயன்படுத்த முடியாது. அத்துடன் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களையும் பயன்படுத்த முடியாது.

மேலும், ஈரானின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டின் மூத்த தலைவரே பொறுப்பேற்க வேண்டும். ஆகவே தான் அவர் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் முகமது அப்பாஸ் மௌசாவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘ஈரானின் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமெனி மீது பொருளாதார தடை விதித்ததன் மூலம், அமெரிக்கா இடையேயான ராஜாங்க உறவு முறியும் தருவாயில் உள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்பின் இதுபோன்ற நடவடிக்கைகள் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers