110 அடி உயர மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணிப்பெண்: உண்மை வெளியானபோது...

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனப்பெண் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது 110 அடி உயர மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தார்.

ஆனால் மயங்கி விழுந்ததாக முதலில் கூறிய அவர், பின்னர் உண்மையை சொன்னதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

காரணம், சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது கணவர்தான் மலையுச்சியிலிருந்து மனைவியை தள்ளி விட்டிருக்கிறார்.

மூன்று மாத கர்ப்பிணியான Wang Nan (32), Pha Taem தேசிய பூங்காவிற்கு சென்றிருந்தபோது 111 அடி உயர மலை உச்சியிலிருந்து விழுந்த நிலையில், அவரது இடது தொடை, கை, கழுத்தெலும்பு மற்றும் முழங்கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் உயிர் பிழைத்துக் கொண்டார்.

அவரது வயிற்றிலிருந்த குழந்தைக்கும் எந்த ஆபத்தும் நேரிடவில்லை.

முதலில் தான் மலை உச்சியில் நிற்கும்போது மயங்கி விழுந்து விட்டதாக Wang தெரிவித்தாலும், சம்பவத்தின் பின்னணியில் ஏதோ சதித்திட்டம் உள்ளதாக பொலிசார் சந்தேகப்பட்டனர்.

பின்னர் விசாரணையில், தனது கணவர் Yu Xiaodong (33) தான் தன்னைப் பிடித்து தள்ளி விட்டதாக ஒப்புக்கொண்டார் Wang.

ஏழையான Xiaodong, பணக்காரரான Wangஐயே நம்பி வாழ்ந்ததாகவும், ஏராளமான கடன் ஆகி விட்டதால், அதை தீர்ப்பதற்காக மனைவியைக் கொன்று விட்டு அவரது 2.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்களை அடைவதற்கு அவர் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.

மனைவி பள்ளத்தில் விழுந்து கிடக்க, மற்றவர்கள் உதவி செய்வதற்கு ஓடிய நிலையில், Xiaodong மட்டும் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Wang தன் கணவரிடம், ஏன் இப்படி செய்தீர்கள் என்று கூறியதை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் கவனித்திருக்கிறார்.

எப்போதும் மருத்துவமனையில் தன் கணவர் தன்னுடனேயே இருந்ததால் பொலிசாரிடம் உண்மையைக் கூற இயலவில்லை என்று தெரிவித்த Wang, அப்படி உண்மையைச் சொன்னால் தன்னைக் கொன்று விடுவதாக Xiaodong மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

மனைவியைப் பார்ப்பதற்காக Xiaodong மருத்துவமனைக்கு வரும்போது பொலிசார் அவரை கைது செய்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்