பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த ஹாங்காங்: மோதல் ஆரம்பித்ததால் பரபரப்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில் கொண்டுவரப்படும் சட்டத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத்தினால் அரசுக்கு எதிராக செயல்படும் பலரும் சீனாவிற்கு நாடுகடத்தப்படலாம். உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களின் மேற்பார்வை இல்லாமல் அரசியல் எதிர்ப்பாளர்களை சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் அதிகாரத்தை கொடுக்கும் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை எதிர்த்து நேற்று துவங்கிய போராட்டத்தில், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இல்லத்தரசிகள், மதத் தலைவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியான வழியில் நடைபெற்ற இந்த போராட்டம் திங்கட்கிழமை அதிகாலையில் மோதலாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிந்துவிட்டதாக நள்ளிரவில் அதிகாரிகள் அறிவிப்பு விடுத்தனர்.

இதனால் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதலில் எச்சரிக்கை விடுத்த பொலிஸார், மிளகு ஸ்ப்ரே பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். சிலர் கண்ணீர் புகை குண்டுகளுடன் தயாராக இருந்து வருகின்றனர்.

இதனை போராட்டக்கார்களும் எதிர்த்து செயல்பட்டு வருவதால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்