உலகின் மிகப்பெரிய ஃப்ரேம்! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த துபாய்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகின் மிகப்பெரிய ஃப்ரேமாக ‘துபாய் ஃப்ரேம்’ தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரம்மாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் ஃப்ரேம்’ என்ற கட்டுமானம் உள்ளது. இந்த கட்டுமானம் 25 கோடி திர்ஹாம் செலவில் 492 அடி உயரமும், 305 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

இதன் மேற்புறத்தில் தங்கநிற உலோக தகடுகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஃப்ரேமின் உச்சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். இதன் உட்புறம் மற்றும் மேற்புறம் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் சூழப்பட்ட நடைமேடையும், இருபுறங்களில் ‘லிப்ட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்பட சட்டத்திற்குள் துபாய் நகரம் உள்ளது போல தெரியும். இது இரும்பு தளவாடங்கள் மற்றும் கான்கிரீட் போன்றவற்றால் முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி திறக்கப்பட்ட துபாய் ஃப்ரேமை ஒரே நேரத்தில் 200 பேர் பார்வையிடலாம். ‘துபாய் ஃப்ரேம்’ கட்டுமானம் போல உலகில் பிரம்மாண்டமான ஃப்ரேம் எங்கும் உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, உலகின் மிகப்பெரிய ஃப்ரேமாக ‘துபாய் ஃப்ரேம்’ தேர்வு செய்யப்பட்டு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ‘துபாய்ஃப்ரேம்’ கட்டுமானத்திற்குள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் நிறுவன அதிகாரி தலால் ஒமர் பங்கேற்றார். பின்னர் துபாய் மாநகராட்சி பொது இயக்குநர் தாவூத் அல் ஹாஜிரியிடம் கின்னஸ் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers