வெளிநாட்டில் இஸ்லாமியர்களை நெகிழவைத்த கிறிஸ்துவர்.. குவியும் பாராட்டு! அப்படி என்ன செய்தார்?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டியுள்ளதால், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவின் காயம்குலம் பகுதியைச் சேர்ந்தவர் சாஜி செரியன்(49). கிறிஸ்துவரான இவர் தற்போது அரபு எமிரேட்ஸ் புஜைரா மாகாணத்தில் வசித்துவருகிறார்.

2003-ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து சவுதி சென்ற இவர், தற்போது அங்கு மத்திய கிழக்கு குழுக்கள் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.

புஜைராவில் 53 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பல நூறு இஸ்லாமியர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்கள், ரம்ஜான் மாதத்தில் தொழுகைக்காக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை டாக்ஸிக்கு கொடுத்து, நீண்ட தூரம் சென்று வழிபாடு நடத்திவந்துள்ளனர்.

இதைக் கவனித்த சாஜி, உடனடியாக புஜைராவில் மரியம் உம் இஷா என்ற பெயரில் ஒரு மசூதியைக் கட்டியுள்ளார்.

அந்த மசூதி, ஏ.சி வசதியுடன் மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. தற்போது, அந்த மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திவருகின்றனர்.

வெளிநாடு வாழ் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, உள்ளூரில் உள்ளவர்களும் அங்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் சில தினார்களுடன்(உள்நாட்டும் மதிப்பு) அரேபியா சென்ற இவர் தற்போது தினமும் 800 இஸ்லாமியர்களுக்குத் தொழுகை விருந்தளிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் 17-ஆம் திகதி இரவு ரம்ஜான் தொடங்கிய தினத்தன்று, இந்த மசூதி தொடங்கப்பட்டது.

அப்போதிருந்து முக்கிய தொழுகை நாள்களில் மட்டும் இங்கு வரும் வழிபாட்டாளர்களுக்கு நான் விருந்தளித்து வந்தேன்.

ஆனால் இந்த ஆண்டு முதல், அனைத்து நாட்களிலும் வரும் அனைவருக்கும் விருந்தளித்துவருகிறேன்.

நோன்பு இருந்துவிட்டு இங்கு தொழுகை நடத்த வருபவர்களுக்கு, பழங்கள், பிஸ்கட்டுகள், ஜூஸ், தண்ணீர் மற்றும் பிரியாணி போன்றவற்றை நான் வழங்கி வருகிறேன்.

இங்கு வருபவர்கள், ஒரே பிரியாணியை உண்டு சலித்துவிடுவார்கள் என்பதால், தினமும் பல விதங்களில் பிரியாணி செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த 63 வயது பஸ் டிரைவர் அப்துல் குயம் கூறுகையில், சாஜி போன்றவர்கள்தான் இந்த உலகத்துக்குத் தேவை. இவரைப் போன்றவர்கள் இல்லாமல் போனால், உலகம் முடிந்துவிடும். நாங்கள் தினமும் அவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த வஜாஸ் அப்துல் கூறுகையில், நாங்கள் இருக்கும் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்துவருகிறோம்.

அதே நிறுவனத்தில் வேலைசெய்யும் உயர் அதிகாரிகளுக்குத் தனியாக சில குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அந்த மசூதிக்குச் சென்றுவிட்டால், அங்கு அனைவரும் சமம்தான். நாங்கள் இணைந்துதான் தொழுகை நடத்துவோம். சாஜி எங்களை அப்படித்தான் நடத்துவார் என கூறியுள்ளார்.
மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்